2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தமிழ்,முஸ்லிம் மக்கள் அஞ்சத் தேவையில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அண்மையில் ​மேற்கொள்ளப்பட்ட, மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பில், சனிக்கிழமை ​(23) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்ப தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தொடர்ந்து கருத்துரைக்கையில்,   

“அரசமைப்பின், 20ஆவது திருத்தம், மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது அவை தொடர்பில், சிறுபான்மைக் கட்சிகள் சில அந்த சட்டத்தில் திருத்த வேண்டிய விடயங்கள் சேர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன் வைத்தன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“அந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கமைவாக, அதனை திருத்துவதற்கு எமது அரசாங்கம் மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்ததுடன் எல்லோரும் திருப்தியடையக் கூடிய மாதிரி அனைவரின் ஆலோசனையையும் பெற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. அது பெரும் வெற்றியாகும். இது நமது நாட்டுக்கு ஒரு பெரும் வெற்றியாகும்”என்றார்.   

அனைவரினது ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கின்ற ஒரு தலைவராக எமது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார்.   

“இந்த சட்ட மூலத்துக்கு, சகல சிறுபான்மை கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை நாங்கள் மறக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் எந்தவொரு தேர்தலுக்கும் அச்சப்படவில்லை. எந்தத் தேர்தலையும் நாங்கள் முகம் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

“எமது ஐக்கிய தேசியக் கட்சியே 2015ஆம் ஆண்டு விரும்பித் தேர்தலை கேட்டது. அதனால், எமக்கு தேர்தல்கள் சவாலே கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலத்த போட்டி போட்டது. ஆனால், அது வெற்றியடையவில்லை. அதில் ஐக்கிய தேசியக் கட்சிதான் நாடாளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிம் நாம் வெற்றியடைவோம். நாம் இந்த நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அதனால், நமது வெற்றியை விட தேசத்தின் வெற்றி முக்கியமானதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நல்ல சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இந்த நாட்டிலுள்ள இரண்டு பெரிய தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும் அதற்காக, அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்”என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.   

 “எங்களுக்கு ஆதரவில்லை நாங்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற மாட்டோம் என எதிரணியில் சிலர் கூறினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்று நாங்கள் எமது ஆதரவை நிரூபித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.   

“நாம், இலங்கையர் என்ற ரீதியில் இப்போது தான் நாங்கள் சுதந்திரமான சுவாசக் காற்றை சுவாசிக்கின்றோம். இந்த நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களவர் மற்றும் பறங்கியர் அனைவரும் அனைத்து உரிமையுடனும் பெருமையுடனும் வாழக் கூடிய சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம் அதுதான் எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்” என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்தார்.   

“ஆட்சியை பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகள் சில பிரச்சினைகள் காணப்பட்டன. இன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை கட்சிகளின் வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இதுவே முதல் தடவையாகும்.   

“ஐக்கிய தேசியக் கட்சி சாதி, சமயம் மற்றும் இன பேதங்களை பார்க்கவில்லை அனைவரும் இக் கட்சியினூடாக முன்னேற முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .