2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘திட்டமிட்டது ஒன்றல்ல’

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில், சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம், எதிர்பாராத சம்பவமாகுமெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. ருவான் குணசேகர,  இது திட்டமிட்டு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக கூறினார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில், முச்சக்கரவண்டிகளை நிறுத்துமிடம் உள்ளது. அங்குள்ள முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்களிடத்தில், நீண்டகாலமாகவே கருத்துவேறுபாடுகள் நிலவிவருகின்றன.

சம்பவதினமன்று, அந்த நிறுத்துமிடத்துக்குப் பின்னால், சிலர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு இடையில், ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வீதிக்கு வந்தமையால், அவ்விடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அப்போதுதான், போதையிலிருந்த ஒருவன் பொலிஸ் சார்ஜன்டின், இடுப்பிலிருந்த கைத் துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்டுள்ளான்.

இதேவேளை, நீதிபதியும் வாகனத்திலிருந்து இறங்கிவிட்டார். எனினும், மற்றுமொரு கான்ஸ்டபிள், நீதிபதியை வாகனத்தினுள்ளே தள்ளிவிட்டு,  துப்பாக்கிதாரியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம், செய்துள்ளார். இதன்போது, துப்பாக்கிதாரி ஓடி விட்டான்.

சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரைக் கைது செய்வதற்கு, பொலிஸ் குழுக்கள் பலவற்றை ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறிய பொலிஸ் பேச்சாளர் குணசேகர, நீதிபதியைக் கொல்வதற்கு, துப்பாக்கிதாரி எத்தனித்ததாக கூறப்படுவதை நிராகரித்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான புலன் விசாரணைகளை, வடமாகாணத்தின்  சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் றொஷான் பெ​ர்ணான்டோ நெறிப்படுத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .