2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் 15 எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு கையளிக்கத் தீர்மானம்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியனவற்றுக்கு இடையில், இணை நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகக் குறிப்பிட்ட பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, திருகோணமலையிலுள்ள 15 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கான அனுமதி கிடைத்துள்ளதென்றும் அவர் அதன்போது குறிப்பிட்டார்.  

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியாலளார் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை தொடர்பில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, குறித்த ஒப்பந்தம் பற்றிய உண்மையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.  

அதற்கமைய, பெற்றோலிய வளத்துறை அமைச்சு, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பில் ஆராய்ந்தது. இதில் 15 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய ஐ.ஓ.சி நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது. ஏனைய எண்ணெய்த் தாங்கிகள் துருப்பிடித்துச் செல்கின்றதையும் அவதானிக்க முடிந்தது. இதன் அபிவிருத்தி குறித்து கடந்த காலங்களில் எவரும் சிந்திக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதனால், இது தொடர்பிலான அமைச்சவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தேன், அந்த பத்திரத்தில் இலங்கை அரசாங்கம் நில உரிமத்தை தக்கவைத்துகொள்ளல், தற்போது இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தும் எண்ணெய்த் தாங்கிகளை அந்நிறுவனத்துக்கே வழங்குதல், இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து இணை நிறுவனமொன்றை ஸ்தாபித்து 85 எண்ணெய்த் தாங்கிகளை சீரமைத்தல், குறித்த நிறுவனத்தினால் சீரமைக்கப்பட்ட 16 எண்ணெய்த் தாங்கிகளை இலங்கைக்கு சொந்தமாகப் பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

பின்பு இந்த தளத்தை கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும். வடக்கு, கிழக்கு விநியோகிக்கப்படும் எரிபொருட்களை களஞ்சியப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 70 வருடங்கள் பழமையான இந்தத் தாங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பான அறிக்கை ஒன்றும் கோரப்பட்டுள்ளது என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.  

எனவே, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படவில்லை என தெரிவித்த அமைச்சர், விற்பனைச் செய்யப்போவதாக குற்றஞ்சாட்டுகின்றவர்கள் கடந்த காலங்களில் இந்த அபிவிருத்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் இருந்தவர்கள் என்றும் மேற்படி அபிவிருத்திச் செயற்பாடுகளை விரும்பாத மாபியா கும்ப​லொன்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .