2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘திருத்தத்தை நிராகரித்தால் இ.தொ.கா எதிர்க்கும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்ட மூலத்தில், எமது திருத்தங்கள் நிராகரிக்கப்படுமாயின், நாடாளுமன்றத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும்” என்று, காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், இ.தொ.கா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“தொகுதிவாரித் தேர்தல் முறைமையால், மலையக மக்களின் பிரதிநிதித்துவங்களில் இழப்பு ஏற்படும் அபாயம் குறித்து இ.தொ.கா ஏற்கெனவே திருத்தங்களைச் சமர்பித்திருந்தது.  

உள்ளூராட்சிமன்றத் திருத்த சட்ட மூலம், எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.  

அவ்வாறு எடுக்கப்படும் போது, இ.தொ.காவின் நியாயமான திருத்தங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்குமாயின், இச்சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே இ.தொ.கா எடுக்கும்.   தற்போதைய நிலையில், புதிய எல்லை மீள் நிர்ணயம், எந்த வகையிலும் மலையக மக்களின் அரசியல் ரீதியிலான உரிமைகளைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. இதேவேளை, தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் இருக்கும் சில அனுகூலங்கள் கூட புதிய கலப்பு தேர்தல் முறை மூலம் இல்லாமல் போகும்.  

60 சதவீதம் தொகுதி வாரியாகவும் 40 சதவீதம் விகிதாசார ரீதியிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கூறப்பட்டாலும் கூட, மலையக மக்களைப் பொறுத்தவரையில் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யக் கூடியதாக அது இல்லை. நுவரெலியா மாவட்டத்தைத் தவிர்த்து, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை , கண்டி போன்ற மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்து வரும் எமது பிரதிநிதித்துவங்கள் இழக்க நேரிடுமாயின், அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படும் வரை நாடு முழுவதுமாக 6,000 உறுப்பினர்கள் இருந்தார்கள், கலப்பு தேர்தல் முறை அமுலுக்கு வரும் நிலையில் இத்தொகை 11,000 ஆக உயரும். இது மூலம் மலையக சமூகத்துக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப்போவதில்லை.  

ஏனெனில், விகிதாசாரமுறை ஆரம்பகட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் மொத்தமாக இ.தொ.காவுக்கு 120க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். இப்புதிய தேர்தல் முறை மூலம் அதில் கணிசமான பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி வரும். மலையக மக்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்கள் சிங்கள கிராம மக்களோடு இணைக்கப்படும் நிலையில், எமக்கு பிரதிநிதிகளைப் பெறமுடியாமல் போகும்.  

இது எமது மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பறிகொடுப்பது போல அமைந்து விடும். வாக்குரிமையில் வரப்பிரசாதங்கள் கேள்விக் குறிக்குள்ளாகும். 1980ஆம் ஆண்டு பிரஜாவுரிமை எம்மவர்களுக்கு கிடைத்ததன் பயனாக இற்றைவரை போதியளவு அங்கத்தவர்களை பெறக் கூடிய வாய்ப்பு மலையக சிறுபான்மை கட்சிகளுக்கு இருந்தன.  

எனவே, மலையக மக்களின் மனக்கிலேசம் தீர்க்கும் வகையில், இச்சட்டமூலத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே எம்மால் அதனை ஆதரிக்க முடியும். இல்லாவிட்டால், மலையக மக்களின் அரசியல் நலன் கருதி இச்சட்ட மூலத்துக்கு, எதிராக நாங்கள் செயற்படுவோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .