2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தேர்தலுக்கு அஞ்சி கையாண்ட யுக்தி’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 23 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது” என்ற விடயத்தை சுட்டிப் பேசிய முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்கு அஞ்சி, காலதாமதப்படுத்துவதற்கான யுக்தியை, அரசாங்கம் கையாள்கிறது” என்றும் குற்றஞ்சாட்டினார்.  

அதிவிசேட வர்த்தமானிக்கு, எதிர்வரும் 04ஆம் திகதி வரையிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்தமை தொடர்பான, குறுஞ்செய்தியைப் பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.  

இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “எமது எதிர்பார்ப்பும் இதுவாகும். நாம் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். எமக்கு தேர்தலைப் பிற்போடுவதற்கான எந்தத்தேவையும் இல்லை” என்றார்.  

இதன்போது எழுந்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, “தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.  

இதில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, “நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியல் கட்சி சார்ந்து செயற்படக் கூடிய உரிமை உண்டு. எவருக்கும், நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமையும் உண்டு. நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற வகையில் தேர்தலுக்குத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.  

இதேநேரம், இந்தத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது தேவையாக இருப்பதாகவும் இந்த விடயத்தில் நீதிமன்றத்தைத் தவறாக பயன்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன் இதன்போது கூறினார்.  

அதுமட்டுமல்லாது, 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு செயற்பட்ட அனைவரும் தற்போதைய இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் விமல் வீரவன்ச எம்.பி.யும் தெரிவித்தார்.  

எவ்வாறிருப்பினும், இந்த விடயத்தை தற்போது விவாதப் பொருளாக்கிக் கொள்ள முடியாது என்று அச்சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .