2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொலைக்காட்சியால் முதலீட்டாளர்கள் அச்சம்

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒன்றிணைந்த எதிரணியினர் தொலைக்காட்சிகளில் பேசுவதைப் பார்த்து, நாட்டுக்கு வருகை தருவதற்கே, முதலீட்டாளர்கள் அஞ்சுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வியமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போதே, அமைச்சர் கிரியெல்ல, இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.   

இந்த விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் கடந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டதை விடவும் மேலதிகமான எந்த வேலைகளும் தற்போதைய அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போதைய நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு 5 சதவீத மதிப்பெண்ணையே வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.   

இதன்போது, குறுக்கீடு செய்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, ‘நீங்கள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்த்து முதலீட்டாளர்கள் வருவதற்கு அஞ்சுகின்றனர்” என்று கூறினார்.   

இருப்பினும், அமைச்சரின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மஹிந்தானந்த அளுத்கமகே, ‘முதலீட்டாளர்கள் எம்மால் வராமல் இருக்கவில்லை. உங்களது மத்திய வங்கி கொள்ளையால் தான் அவர்கள் வரவில்லை. கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்துக்கு, சீன ஜனாதிபதியால் நாட்டி வைக்கப்பட்ட அடிக்கல்லை தூக்கி வீசியிருந்தீர்கள். அதைவிடுத்து எம்.பி.க்களின் பேச்சுகளால் முதலீட்டாளர்கள் வரவில்லை என்று கூறுவது அபத்தமானது” என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாட்டால் எம்.பி.க்கள் வங்களில் சென்று கடன் பெறவோ அல்லது கணக்குத் திறக்கவோ முடியாமல் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம், அரச தொழில்முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (கோப்) சர்சைக்குரிய திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்துக் கொண்டிருந்த போது, பேர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்புகொண்டு பேசியிருந்ததாக கூறப்படும் எம்.பி.க்களின் கோப் குழு அங்கத்துவத்தை இடைநிறுத்தி, அது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது மேலும் வலியுறுத்தினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .