2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இராட்சத அட்டை’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ். எஸ்.கணேசன், எஸ். சதீஸ், ரஞ்சித் ராஜபக்‌ஷ

 

மலையகம் முழுவதுமாகப் பல தோட்டங்களில், நேற்றைய தினம் (12), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கொடும்பாவியை எரித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்கள் அனைவரையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்ததற்கு அமைய, கடந்த 8 தினங்களாக, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தப் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுமாறும் இந்தச் சம்பள விவகாரம் தொடர்பில், எதிர்வரும் 19ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும், இ.தொ.க தலைவர், நேற்று முன்தினம் (11) மாலை அறிவித்தார்.

இ.தொ.க தலைவரின் பணிப்புரைக்கமையப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட மக்களும், இ.தொ.காவுக்கு எதிராக, நேற்று (12) ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் பணிப்பகிஷ்கரிப்பால், எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என்றும் கடந்த 8 தினங்களாக முன்னெடுத்த இந்தப் பணிப்பகிஷ்கரிப்பால், தாங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிப்படைந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அத்தோடு, 19ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையிலும் நல்ல தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்துடனே​யே, தாங்கள் இருப்பதாகவும் இ.தொ.கா மீது இருந்த நம்பிக்கை இழந்து விட்டோம் என்றும், இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், மடக்கும்புர தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக, “தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இராட்சத அட்டை” என்று, ஆறுமுகன் தொண்டமானை வர்ணித்து, அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.

அத்தோடு,  “மீசைக்கார அண்ணாச்சி, ஆயிரம் ரூபாய் எண்ணாச்சி” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு, கோவிலுக்கு முன்பாக சிதறு ​தேங்காய்களும் உடைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு, ஹட்டன் பகுதியில், செனன், ​எபோட்சிலி, பொகவந்தலாவையில் லெட்சுமி தோட்டம், பொகவந்தலாவ தோட்டம், டிக்கோயா, சாஞ்சிமலை, மஸ்கெலியாவிலுள்ள தோட்டங்கள், டயகமவிலுள்ள தோட்டங்கள், நகரங்கள் ஆகிய பல இடங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் வெடித்தன.

லிந்துலை கொணன் தோட்டம் உள்ளிட்ட சில தோட்டங்களின் தொழிலாளர்கள், வழமைப்போன்று நேற்று கடமையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தோட்டங்களும், நேற்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்வரும் தைப்பொங்கள் விழா, 2019ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான உபகரணக் கொள்வனவு போன்ற அனைத்துமே, இதனால் பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் இ.தொ.கா மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .