2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டை நாசம் செய்தது ரணிலா, மஹிந்தவா?

Nirosh   / 2019 ஜனவரி 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராகக் கடமையாற்றிய ஐம்பது நாள்களில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்த நாட்டை நாசம் செய்தாரா? இல்லை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டை நாசம் செய்தாரா என்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்கள் விவாதமொன்றை நடத்த வேண்டுமெனக் கோரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி பந்துல குணவர்தன, அரசாங்கத்தின் தொடர்ப் போலிப் பிரசாரங்களால், சர்வதேசக் கடனுதவிகள் ​தடைபடும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

கொழும்பு - புஞ்சி பொ​ரளையில் உள்ள, வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், நேற்று (13) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் 50 நாள் குறுகிய அரசாங்கமே, இந்நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டமைக்குக் காரணமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் கருத்து, முட்டாள்தனமானதெனத் தெரிவித்தார்.  

குறித்த ஐம்பது நாள்களில், 8 பில்லியன் டொலர்களை மஹிந்த ராஜபக்‌ஷ நாசம் செய்துவிட்டாரென, பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பிரதமர் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய பந்துல எம்.பி, பிரதமரின் இந்தக் கருத்து, முற்றிலும் பொய்யானது ​என்றார். 

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் மாதம் வரையான வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில், இலங்கை மத்திய வங்கி, உடனடியாக அறிக்கையொன்றை வெளியிட வேண்டுமெனவும் இதன்மூலம், வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிய முடியுமெனவும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் போலிப் பிரசாரங்கள் தொடருமாயின், சர்வதேச நாடுகளின் கடனுதவிகள் தடைபடும் ஆபத்து ஏற்படுமென எச்சரித்தார்.  

மேலும், ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதிப் பதவி வகிக்காத ஒருவரைத் தெரிவுசெய்வதே வழக்கமெனவும் சுட்டிக்காட்டிய பந்துல குணவர்தன, ஜனாதிபதி வேட்பாளராக யாரைக் களமிறக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.     

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .