2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பாதீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய முடியும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டில், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாயின், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எமது நாட்டுக்கு மாத்திரமன்றி, உலக நாடுகள் பலவும் அந்த சவால்களை எதிர்நோக்கியுள்ளன என்றும், அவர் தெரிவித்தார். 

“அரசாங்கத்தால் முடியாததை, எங்களால் நிறைவேற்ற முடியும்” என்ற அரசியல் சந்தர்ப்பவாத கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, நாட்டினதும் மக்களினதும் நலன் குறித்து, பொறுப்புடன் செயற்படுமாறு, அனைவருக்கும் தான் தெரிவிப்பதாகவும், ஜனாதிபதி கூறினார்.  

மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டடத்தை, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (13) மாலை, இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, உலகப் பலசாலிகளின் பொருளாதார முரண்பாடுகள் காரணமாக, இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குத் தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், உரிய பொருளாதாரத் திட்டங்களினூடாக, அந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.  

அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும், தமது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றும் போது, ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளின்றிச் செயலாற்றுவார்களாயின், நாட்டின் பொருளாதார இலக்குகளை நோக்கிப் பயணித்தல் கடினமான விடயமல்ல என்றும் குறிப்பிட்ட அவர், ஊழல், மோசடிகளால் வேரூன்றிப்போயுள்ள நாட்டில், அவற்றைத் தடுக்க இயலுமாயின், நாட்டில் வறுமையை இல்லாதொழித்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டங்களை மிகுந்த வினைத்திறனுடன் நிறைவேற்ற முடியுமெனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .