2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரமிட் வர்த்தகத்துக்கு இடைக்கால தடை உத்தரவு

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

 

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்று  (12) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். 

கடந்த சில தினங்களாக குறித்த நிறுவனம் சாவகச்சேரி பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன், கூட்டங்களை நடத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தபோது , பாதிக்கப்பட்டவர்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுடன் முரண்பட்டுள்ளனர். அதனால் குழப்பங்களும் ஏற்பட்டிருந்தன. 

குழப்பங்கள் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார், குழப்பத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், அது தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு, நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டது. 

அத்துடன், நிதிகுற்ற புலனாய்வு பிரிவினருக்கு குறித்த நிறுவனத்தின் பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு அறிவித்து நிறுவனம் தொடர்பிலான நடவடிக்கைகளை உடனடியாக கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பிலான கடிதத்தை நீதிமன்று பதிவாளர் காலதாமதமின்றி அனுப்பி வைக்குமாறும் பணித்தார். 

அத்துடன், இது தொடர்பில், வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார். 

இதேவேளை, மக்கள் இந்த வியாபர நடவடிக்கையால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக இந்த நீதிமன்ற கட்டளையை பத்திரிகைகளில் பொலிஸார் அறிய கொடுத்து, மக்கள் பாதிக்கபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக முன்னிலையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தினார். 

அத்துடன், குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள், கூட்டங்களை நடத்த ஒழுங்குகளை செய்து கொடுத்தவர்கள், மண்டபங்களை கொடுத்தவர்கள் ஆகியோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் தேவை ஏற்படின் அவர்களையும் இந்த வழக்கின் சந்தேக நபர்களாக இணைத்து கொள்ளுமாறும் நீதவான் பணித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .