2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய எடுத்துக்காட்டு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தமையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய யுகத்துக்கான எடுத்துக்காட்டாகும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

“எனினும், கடந்த ஆட்சியின் போது குற்றச்சாட்டுகள் இருந்த யாரும், இவ்வாறு செய்ய முன்வந்திருக்கவில்லை, இராஜினாமாச் செய்யுமாறு வலியுறுத்திய, எங்களையே, தூசித்தனர்” என்றும் குறிப்பிட்டார்.  

அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதாக, ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிவித்து அறிக்கை விடுத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “எமது கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக, செவ்வாய்க்கிழமையன்று எமக்குக் கூறினார். எனினும், ஜனாதிபதியைச் சந்தித்தே பின்னர் அதைச் செய்யுமாறு நான் கூறினேன்.  

“அதன் பிரகாரம், ஜனாதிபதி, நான் மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆகியோர் புதன்கிழமையன்று சந்தித்தோம். அந்தச் சந்திப்பின் போதே, தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை அவர் வழங்கினார். 

“இதன்மூலம் புதிய சம்பிரதாயமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தான் பதவி விலகுவர். அந்த வகையில், இந்த விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்ற முன்னுதாரணத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.  

“இதற்கு முன்னர், திருடர்கள் எப்படிச் செயற்பட்டனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த ஆட்சியில் எந்தவோர் அமைச்சரும் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்று பார்த்ததில்லை. ஆனால், நாம் தற்போது புதிய கலாசாரமொன்றை ஏற்படுத்திக் காட்டியுள்ளோம்.  

“நாம், திருடர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவ்வாறானவர்களை விலக்குவதே ஐ.தே.க.வின் சம்பிரதாயமாகும். கடந்த 10 வருடங்களில், குற்றசாட்டுகள் இருந்த யாரும் இவ்வாறு பதவி விலகச் செயற்பட முன்வந்திருக்கவில்லை.  

“ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்களுக்கும் ஊடகவியலாளர் எக்னெலிகொடவை கடத்தியவர்களுக்கும் எதுவும் நடக்கவில்லை.  

“எவ்வாறிருப்பினும், அமைச்சர் ரவி கருணாநாயக்க, உயர்நீதிமன்றம் சென்று தடையுத்தரவொன்றைப் பெறுவதற்குச் செயற்பட்டிருக்கவில்லை. பதிலாக, விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சென்று சாட்சியமளித்து, தற்போது தமது பதவி இராஜினாமாச் செய்து பின்வரிசையில் அமர்ந்து முன்னுதாரணமாகச் செயற்பட்டுள்ளார். நாட்டுக்கு நாம் ஏற்படுத்தியுள்ள இந்தப் புதிய சம்பிரதாயத்தையிட்டு, நாம் பெருமைப் படுகிறோம்” என்று தெரிவித்தார்.    

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X