2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பேச்சளவிலேயே பேச்சுச் சுதந்திரம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படாமல், எவரும் யார் மீதும் விமர்சனங்களை முன்வைக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், பிணைமுறி விசாரணையின் முக்கிய சாட்சியான அனிகா விஜேசூரிய, கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ், இக்குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, அனிகா விஜேசூரிய இருந்திருக்காவிட்டால், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குடியிருந்த வீட்டுக்கு, அர்ஜுன் அலோஸியஸ் குத்தகை செலுத்தினார் என்ற விடயம் வெளிப்பட்டிருக்காது என்று குறிப்பிட்டார்.  

“பிணைமுறி மோசடியில், முக்கியமானதொரு கட்டம் இதுவாகும். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர் ஒருவர், சாட்சிக்குக் கொலை அச்சுறுத்தல் வழங்கியுள்ளார். சிறிய மீன் வகைகளை விமர்சிக்கலாம், ஆனால் சுறாக்களை அவ்வாறு விமர்சிக்க முடியாது. சுறா மீது விமர்சனம் முன்வைக்கப்படும் போது, கொலை அச்சுறுத்தல் கிடைக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.  

பிணைமுறிச் சாட்சியமளிப்புக்கு வந்தவர்களில், அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்கிரம ஆகியோரைத் தவிர, ஏனைய அனைவரையும், சட்டமா அதிபர் திணைக்களம், தைரியமாகக் குறுக்கு விசாரணை செய்தது என, அவர் இங்கு குறிப்பிட்டார்.  

“இந்த இரு அமைச்சர்களும், சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளால், குறுக்கு விசாரணை செய்யப்படவே இல்லை. பிணைமுறி மோசடி தொடர்பில், தைரியமான கேள்விகளைக் கேட்பது, உண்மைகளைக் கொண்டுவர உதவியது. கேள்விகள் கேட்கப்படாத போது, விசாரணையை அது பாதிக்கும். முழுமையான உண்மையும் வெளிப்படுமென்று, இப்போது எண்ண முடியாதுள்ளது” என்று தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கேள்வித் தொகுதிப்பு வழங்கப்பட்டு, பிரமாணப் பத்திரம் மூலமாகப் பதிலளிக்குமாறு கோருவதை விட, அவர் நேரடியானக் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டுமென, அவர் இங்கு தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X