2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொல்கம்பொலவுக்குப் பிணை

Editorial   / 2018 மே 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும்  முன்னாள் எம்.பியுமான அனுருத்த பொல்கம்பொலவுக்கு, இன்று (18) பிணை வழங்கப்பட்டது.

5 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில், பொல்கம்பொலவை விடுவிக்க, கிளிநொச்சி நீதவான் ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

வடக்கு ரயிவே தடத்தை நிர்மாணிக்கும் போது, கிரவல் கற்களைக் கொட்டுவதற்கும் மண்ணை வெட்டுவதற்குமென, 80 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தை மோசடி செய்தாரென்ற குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வழக்கில் ஆஜராகாமையால், அவருக்கெதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டார். தாம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே அவரைக் கைதுசெய்ததாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் எம்.பியான அனுருத்த பொல்கம்பொல, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக மே மாதம் 4ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

இந்நிலையில், பொது விமர்சனங்களை முன்வைத்தாரென்ற குற்றச்சாட்டின் கீழ், அந்தப் பதவியிலிருந்து அவர், மே மாதம் 10ஆம் திகதியன்று நீக்கப்பட்டார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அனுருத்த பொல்கம்பொல, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தார். இந்நிலையில், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மேற்படி சந்தேகநபரான அனுருத்த பொல்கம்பொல, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .