2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மிக் கொள்வனவு : திடுக்கிடும் தகவல்கள்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இலங்கை விமானப்படைக்கு, மிக்-27 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில், சுமார் 3 வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு, தற்போது திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேற்படி மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக, உக்ரைனில் உள்ள இராணுவப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்துக்கும் (உக்ரைன்மாஸ்) இலங்கை விமானப்படைத் தளபதிக்கும் இடையில், போலியான ஆவணங்களைக் கொண்டு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு அரச வழக்கறிஞர், மேற்படி​ போர் விமானக் கொள்வனவு செய்யும்போது ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில், நிதிமோசடி இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளாரென, நிதி மோசடி விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு, மிக்-27 ​போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக, பெல்லிமிஸ்ஸா ஹோல்டிங்கஸ் லிமிடட் என்ற நிறுவனத்துக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், கொடுக்கப்பட்ட அந்தப் பணமானது, பிரிட்டி​ஸ் வெர்ஜின் தீவுகளில் இரகசியமாக இயங்கிவந்த வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு, கடந்த காலங்களில் போர் விமானங்களை வழங்கியிருந்த சிங்கப்பூரை மையமாகக்கொண்டு இயங்கும், டி.எஸ்.ஏலியனஸ் நிறுவனத்துடமிருந்தே, இலங்கைக்குப் போர் விமானங்களை வழங்குவதற்கு, உக்ரைன் நிறுவனம் ​ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, டி.எஸ்.லீ என்பவரே இருந்துவந்துள்ளார். இவர், பெல்லிமிஸ்ஸா ஹோல்டிங்கஸ் லிமிடட் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளமையும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது, உக்ரைன் இராணுவப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் கையெழுத்திட்ட முக்கிய நபர் ஒருவர், உக்ரைன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளதாகவும் பின்னர், உக்ரைன் அதிகாரிகள் அவரை, பாரிஸ் நகரில் வைத்துக் கைது செய்துள்ளதாகவும், நிதி மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .