2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மாமூலான அரசியலே செய்கின்றன’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்களாக இருந்து செயற்படும் அரசியல் கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார். 

புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து, ஊடகங்களுக்கு நேற்று (17) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,   

“புதிய கோணத்தில் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி கூட்டணியை அமைத்திருக்கின்றோம். மக்கள் விரும்பக்கூடிய தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். மக்கள் எமது கொள்கையை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். எமது கூட்டணியுடன் பல சிவில் சமூக அமைப்புகளும் இணைந்துகொள்ளவுள்ளன.   

“எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சென்று ஒட்டிக்கொள்வதுதான் ஒரு கலாசாரமாக இருக்கின்றது. இதுதான் மிகப்பெரிய ஒரு மோசமான கலாசாரமாகவுள்ளது.  

“இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மாமூலான அரசியலேயே செய்து கொண்டிருக்கின்றன. அதாவது பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசியல் கலாசாரத்திலிருந்து முஸ்லிம்களை நாங்கள் மீட்டெடுக்க வேண்டி இருக்கின்றது.   

“எந்த அரசாங்கத்துடனும் சேரக் கூடாது என்ற கருத்தை எவரும் புரிந்து கொள்ளக் கூடாது. நாம் சேர்ந்து கொள்வதாயின் எமது சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகள தற்றும் சமுதாயம் சார்ந்த பலமிக்க ஒப்பந்தங்களை செய்து கொண்டு அதன் மூலம் நன்மைகளை அடைய வேண்டுமென்பதேயே கூறுகின்றேன்.  

“கிழக்கிலே முஸ்லிம்கள் 32 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்துள்ளார்கள். அந்தக் காணிகளில் ஓர் அங்குலமேனும் மீட்டுக்கொடுக்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டம் நிலப்பங்கீட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   

“அம்பாறை மாவட்டத்தில் ஏறத்தாள 72 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் அனுபவிக்கின்ற நிலம் அவர்களது பரினாமத்துக்கு ஏற்றவாறு இங்கு அமையவில்லை.  

“1952ஆம் ஆண்டின் கல்லோயாத் திட்டம் உருவாக்கப்பட்ட பொழுது, காணிகள் பறிபோனது மட்டுமல்ல புதிய குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டன. பின்னர் 1961ஆம் ஆண்டு புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது குடியேற்றங்கள் செய்யப்பட்டது மட்டுமல்லமால், ஏனைய மாவட்டங்களும் இதோடு சேர்க்கப்பட்டு எங்களுடைய சனத்தொகைப் பரம்பல் விகிதாசாரம் 500 சதவீதம் மாற்றியமைக்கப்பட்டது. எங்களைவிட பெரும்பான்மைச் சமூகம் 500 சதவீதம் அதிகரித்தார்கள் அந்தச் செயற்பாட்டில் மட்டும்.  

“அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு புதிய உள்ளூராட்சி எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்ட போது, முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல், ஆறில் ஐந்து பெரும்பான்மைக் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அரசாங்கம் கொழும்பிலே இருந்து கொண்டு ஒரு பென்சிலை எடுத்து கோடு போட்டு இங்கே புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கினார்கள். அந்த நேரத்திலும் நாங்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டோம்” எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .