2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரணிலைப் பிரதமராக நியமிக்கும் பிரேரணைக்கு 117 நம்பிக்கை

A.Kanagaraj   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராகச் செயற்படுவதற்கு, நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை அவர் மீதுண்டென, நாடாளுமன்றத்தில் நேற்று (12) கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு, 117 வாக்குகள் கிடைத்தன.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (12) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கைப் பிரேரணையை சமர்ப்பித்து, முன்மொழிந்து உரையாற்றினார். அதனை, மங்கள சமரவீர எம்.பி வழிமொழிந்து உரையாற்றினார்.

சஜித் பிரேமதாச, தனதுரையில், ஜனநாயகம் தொடர்பில் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிலர் கூறியதைக் கோடிட்டு காட்டியதுடன், புத்த தர்மப் போதனைகளில் இரண்டையும் கோடிட்டுக் காட்டினார். அப்போது சபையில் இருந்தவர்கள், மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டுமென, இரண்டு முறை கூறியபோது, ஜே.வி.பி எம்.பிக்கள், மேசைகளில் தட்டவில்லை. அதேவேளை, ரணிலும் மேசையில் தட்டாமல், அமைதியாக இருந்துவிட்டார். ஏனையவர்கள் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

அரசமைப்பில் சில சரத்துகளைக் குறிப்பிட்டு சஜித் உரையாற்றுகையில், தன்னுடைய மேசை மீது, கீழிந்த நிலையிலிருந்த அரசமைப்புப் புத்தகத்தை எடுத்த ரணில் விக்கிரமசிங்க, அதனைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துகொண்டிருந்தார்.

தனக்கு முன்னிலையில் இருப்பது செழிமையானதெனத் தெரிந்தும், அதைச் செழிமையற்றதென்றும் தனதருகில் இருப்பது செழிமையற்றதெனத் தெரிந்தும், அதைச் செழிமையானதென்றும் கூறுபவர்களாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் அவ்வாறானவர்களுக்கு, உண்மை எது? சரி எது, பிழை எதுவென்பது தெரியாதென, ஜனாதிபதியின் தீர்மானத்தை விமர்ச்சித்த சஜித் எம்.பி,  தனதுரையில், புத்த தர்மப் போதனைகளில் ஒன்றை குறித்துக் காட்டினார்.  

தான் ஒரு பிராமணர் என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. அவர் பிராமணரா அல்லது இழிவானவரா என்பது, அவரது நடத்தையின் மூலமாகவே உறுதிப்படுத்தப்படுகின்றது என்றும் மற்றுமொரு போதனையை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், நல்லொழுக்கம் உடையவர்கள், கீழ்த்தரமான செயல்களைச் செய்யமாட்டார்கள் என்றும் கூறினார். இதன்போது, அவையிலிருந்த அனைவரும் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

இதனையடுத்து, பிரேரணை வழிமொழிந்த மங்கள சமரவீர எம்.பி உரையாற்றிய பின்னர், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றினார். அதன் பின்னர், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க எம்.பிக்கள் உரையாற்றினர்.

அதன் பின், பிரேரணை மீது இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு எதிராக, எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. ஆதரவாக, ஐக்கிய தேசிய முன்னணியினர் வாக்களித்தனர். அவர்களுடன் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகள் வாக்களித்தனர். எனினும், சபையிலிருந்த கூட்டமைப்பு எம்.பியான சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜே.வி.பி எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, நேற்றைய தினமும் நாடாளுமன்றத்துக்கும் சபை நடவடிக்கைக்கும் சமூகமளிகவில்லை. அதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்திய நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக, 117 வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X