2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘வடக்குக்கு சட்ட அதிகாரம் வழங்கப்படமாட்டாது’

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அர​சமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் கோரப்படுவதாகவும், இதற்கு, தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறிய ஜே.வி.பி, கடந்த 3 வருடங்களில் நிறைவேற்ற முடியாதுபோன அரசமைப்பை, அடுத்த ஒன்றரை வருடங்களுக்குள் நிறைவேற்றக்கூடிய இயலுமை, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு இல்லையென்றும் கூறியது.  

தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ஆம் ஆண்டு அரசமைப்பு, நடைமுறையில் இந்த நாட்டுக்குப் பொருத்தமற்றுள்ளதால், புதிய அரசமைப்பொன்றின் தேவை அவசியமாகியுள்ளதென, கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.  

உலக நாடுகளைப் போன்று, இலங்கையிலும் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, புதிய சமூகத்துக்கு பொருத்தமான அரசமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த அரசமைப்பினூடாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, சகலரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரினார்.   

2015ஆம் ஆண்டில், புதிய அரசமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2006ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போதும், அதற்குரிய முன்னெடுப்புகள் இடம்பெற்றன என்றுத் தெரிவித்த விஜித்த எம்.பி, அந்த அனைத்துச் சந்தர்பங்களிலும், ஜே.வி.பியின் பங்களிப்பு இருந்ததெனச் சுட்டிக்காட்டினார்.  

அதேபோல், அரசமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழுவினால், ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் போனதன் காரணமாகவே, அக்குழுவின் அறிக்கையை இன்றுவரையில் வெளிபடுத்த முடியாமல் போயுள்ளது எனவும் குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க, மஹிந்த அணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார்.  

இவ்வாறான நிலைமையிலேயே, புதிய அரசமைப்பு வடிவம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்டவில்லையென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்தாகக் கூறிய விஜித்த ​ஹேரத், புதிய அரசமைப்பு, நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்கும் என்றும், அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்ள கையுர்த்தும் எம்.பிக்களுக்கு, 400 மில்லியன் வழங்கப்படுவதாகவும், போலிப் பி​ரசாரங்கள் செய்யபட்டனவெனச் சுட்டிக்காட்டினார்.  

அதேபோல், 20ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றியும் போலிப் பிரசாங்கள் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மஹிந்த அணியினர் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரும் சுமந்திரன் எம்.பியும் கூட, இவ்வாறான பிரசாரங்களை செய்துள்ளனரெனத் தெரிவித்ததோடு, மக்கள் இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற்றமடையக் கூடாதென்றார்.    

.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .