2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வித்தியா படுகொலை: குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீட்டு மனு

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகளும், தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனுவை முன்வைத்துள்ளனர். மரபணுப் பரிசோதனை அறிக்கையின் முடிவுக்கு மாறாக, தமது கட்சிக்காரர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதென, மேன்முறையீட்டு மனுவில் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கை, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேம சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டது.  

விசாரணைகளின் நிறைவில், ஒன்பது எதிரிகளில் ஏழு பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன், கூட்டு வன்புணர்வு மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்கு ஏழு குற்றவாளிகளுக்கும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இரண்டு பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.  

இந்நிலையில், ஐந்துக்கும் குறையாத நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையிலேயே தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்ற சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .