2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெலிகடை விவகாரம்: ரிட் மனுவுக்கு திகதி குறிப்பு

Thipaan   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9, 10ஆம் திகதிகளில் வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது, சிறைக்கைதிகள் 27 பேர் மரணமடைந்தமை தொடர்பில் துரித விசாரணைகளை நடத்துமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணைக்கு, ஒக்டோபர் 17ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (12) குறித்தது.

பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு, விசாரணை நடத்துமாறு உத்தரவிடுமாறு கோரியே, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சுதேஷ் நந்திமால் சில்வா என்பவரால், மேற்குறிப்பிட்ட ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.   

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான, எல்.ரி.பி.தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று (12) மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டது.   

மேற்குறிப்பிட்ட மனுவில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.   

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணியளலில், தமக்கும் வெலிக்கடை சிறையிலுள்ள ஏனைய கைதிகளுக்கும், விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும், சிறைச்சாலைக்குள் நுழையவுள்ளனர் என்ற பிரத்தியேக தகவல் கிடைத்ததாக, மனுதாரர், தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.   

மேலும், சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை நடத்துவது தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் விசேட அதிரடிப்படையினரும் இடையில், சிறைச்சாலை வாயிலில் வைத்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமையை தம்மால் அறியமுடிந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.   

ஆட்சிமாற்றம் இடம்பெற்றதன் பின்னர், 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், தான், முறைப்பாடு பதிவு செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .