2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டுப் பயணங்களுக்கு முனசிங்கவுக்குத் தடை; இன்றுவரை மறியல்

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ்.முனசிங்க, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவருக்கு இன்று ​(11) வரையிலும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், திங்கட்கிழமை (09) மாலை கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்டவாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கட்டளையிட்டார்.   

என்.எம்.எஸ்.முனசிங்கவின் வங்கிக் கணக்கில், தாய்லாந்து வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கருதப்படும் 110 மில்லியன் ரூபாய் பணம், வைப்பில் இருந்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.  

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணம், இலங்கை உட்பட கம்போடியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.  

இதையடுத்து தாய்வான் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த அதிகாரிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   

தமது வங்கிக் கணக்குகளில் ஊடுருவி, கொள்ளையிடப்பட்ட பெருந்தொகைப் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர் வரையில், இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கி தெரிவித்துள்ளது.  

கணினிகளுக்குத் தீங்கிழைக்கும் வைரஸ்கள், தமது நிறுவனத்தின் கணினிகளுக்குள் பரவியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கி மேலும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு தாய்வானின் நிதி முகாமைத்துவ ஆணைக்குழுவும் குற்றப் புலனாய்வுப் பணியகமும் தீர்மானித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், தாய்வானின் தகவல் பாதுகாப்புப் பொறிமுறையை உறுதிப்படுத்தி, விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, அந்நாட்டுப் பிரதமர் லேய் சிங் டே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சந்தேநபர் இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளா​ர்.  

அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட, முதலாவது சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் வங்கிகளில் சி.சி.டி.வி. காணொளிகளின் அடிப்படையிலும் இரண்டாவது சந்தேக நபர், திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .