2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டை விவகாரம்: பொதுநலவாயத்துக்கு தினேஷ் கடிதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ளார்.

தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைதை, நியாயப்படுத்த முடியாதது என வர்ணித்த அவர், அது தொடர்பாக அச்சங்கத்துக்கு விளங்கவைப்பதற்காக, திகதியொன்றை ஒதுக்கித் தருமாறே கோரியுள்ளார்.   

இதற்கான திகதி கிடைத்த பின்னர், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று, சுவிற்ஸர்லாந்திலுள்ள பொதுநலவாய நாடாளுமன்றச் சங்க அலுவலகத்துக்கு விஜயம் செய்யுமெனவும், அப்போது, “ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம்” தொடர்பில், அவர்கள் அறிக்கையிடுவர் எனவும், இதில் முக்கியமாக, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அதிக கவனஞ்செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.   

இலங்கை விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடு குறித்து எதிர்ப்பான நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் வெளிப்படுத்திவரும் ஒன்றிணைந்த எதிரணி, தமக்குச் சார்பான சில தருணங்களில், வெளிநாட்டுத் தலையீட்டைக் கோரிவருகின்றமையை, அவதானிக்க முடிகிறது.

நாமல் ராஜபக்‌ஷ, இம்மாதம் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையையும், ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலியையும் விளித்து, “தேசிய சொத்துகளை விற்பதற்கு எதிராக மேற்கொண்ட அமைதியான போராட்டத்துக்காக, எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் விதமாக, இலங்கை பொலிஸ், எங்களைக் கைதுசெய்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தமை நினைவுபடுத்தத்தக்கது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X