2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தேர்தல் நடத்தாத ‘மெகோ’ என்பதற்கு நான் பொறுப்பல்ல’

Editorial   / 2017 மே 25 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டு மக்கள் எனக்கொரு பெயர் வைத்துள்ளனர். அதாவது, தேர்தல் நடத்தாத ‘மெகோ’ அந்த பெயருக்கு நான் பொறுப்பல்ல” என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில், அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,  

“உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தை 2012ஆம் ஆண்டு மாற்றிவிட்டனர். ஆகையால், அந்தச் சட்டம் 2013ஆம் ஆண்டே அதிகாரத்தை இழந்துவிட்டது.  

அதற்கிடையில், எல்லை நிர்ணய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்தன. உள்ளூராட்சி மன்றச் சட்டமானது, அதிகாரத்துடன் இருந்திருக்குமாயின், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தியிருக்கலாம்.  

எல்லை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான், அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் காணப்பட்ட தொழில்நுட்ப முரண்பாடுகளைத் திருத்துவதற்கு அண்மையில்தான் அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.  

உதாரணமாக, இலங்கையில் உள்ள பாடசாலைகள் இரண்டுக்கு இடையில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டியை, இந்தியாவில் உள்ள மைதானமொன்றில் நடத்தமுடியாது. அதேபோலதான், தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைமையும் உள்ளது. 

மைதானத்தைத் தயார்படுத்திக் கொடுத்தால், தேர்தலை நான் நடத்துவேன். அந்தவகையில், அதற்கான அங்கிகாரத்தை நாடாளுமன்றம், ஜூன் மாதமளவில் வழங்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.  

தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர்தான், அவ்வதிகாரங்கள் எம்மைவந்து சேரும், அதுவரையிலும் தேர்தல் நடத்தாத ‘மெகோ’ என்று என்பெயரை அழைப்பதற்று நான் பொறுப்பல்ல” என்றார். 

தேர்தல்கள் ஆணையாளருக்கு, சிங்கள மொழியில் மெத்திவரண கொமசாரிஸ் என்றே அழைப்பர். அதன் சுருக்கப் பெயரே ‘மெகோ’ ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X