2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய ஊடகவியலாளர்கள் திருகோணமலை விஜயம்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு, நேற்று (13)  விஜயம் செய்து, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி, யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை ஆகியற்றை ஆராய்ந்தனர்.

இக்குழுவை,  கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் எம்.ஹஸன் அலால்தீன் வரவேற்றதுடன், கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், இந்திய ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உயரதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றும், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன தலைமையில், கிழக்கு மாகாண சபை அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இப்பிரதேசத்தில் பொருளாதார முதலீடுகளை மேற்கொண்டு, இம்மாகாணத்தின்  பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்க்க உதவ வேண்டுமென, கிழக்கு மாகாண சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன்போது, உரையாற்றிய இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி. பாண்டி, 30 வருட கால யுத்தத்தின் பின்னர் இம்மாகாணம் தற்போது அடைந்துள்ள அபிவிருத்தி நிலை, உலகத்திலுள்ள ஏனைய யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி பிரதேசங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தமது குழுவினர் இந்தியா திரும்பியதுடன், இந்நாட்டின் உண்மைநிலையை  இந்திய மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தெரிவித்து, சுற்றுலாத்துறையிலும் பொருளாதாரத்திலும் இம்மாவட்டம் மேலும் முன்னேற்றம் அடைய ஆவண செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 11 மாநிலங்களைச்சேர்ந்த 28 ஊடகவியலாளர்கள் இப்பயணத்தில் இணைந்திருந்தனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண  ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மேற்படி இந்திய ஊடகவியலாளர்களால் பொன்னாடை போர்த்தி, கௌரவக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .