2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உவர்மலைப் பகுதியில் குப்பை அகற்றுதலில் புதிய நடைமுறைகள்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுமக்களின் நலன் கருதி, குப்பை அகற்றுதல் தொடா்பாக, புதிய நடைமுறைகளை உவர்மலைப் பகுதியில் அமுல்படுத்த, திருகோணமலை நகரசபை தீா்மானித்துள்ளது.  

இதனடிப்படையில், உவர்மலைப் பகுதி 03 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தலைமையகப் பொலிஸ், மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகள் முதல் வலயமாகவும் உவர்மலை மத்திய வீதியை அண்டிய பகுதிகள் இரண்டவாது வலயமாகவும் உவர்மலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை அண்டிய பகுதிகள் மூன்றாவது வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளுக்குப் பொறுப்பாக மேற்பார்வையாளர் ஒருவரும் தலைமைத் தொழிலாளி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், ஒவ்வொரு வலயத்துக்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் வருகின்ற தினம் பற்றியும் அன்றைய தினம் மேற்பார்வை மேற்கொள்ள வரும் உத்தியோகத்தரின் பெயரும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவுள்ளதாகவும், நகர சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வலயம் 01இல் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் குப்பை சேகரிக்கப்படவுள்ளதுடன்,  வலயம் 02இல் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும்,  வலயம் 03இல்  புதன்கிழமையும், சனிக்கிழமையும் என நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், நகரசபை வாகனம் வரும் போது சில வீடுகள் பூட்டியிருப்பதால் குப்பை அகற்ற முடிவதில்லையெனவும், சிலருக்கு குப்பை சேகரிக்கும் வாகனம் வருவது தெரியாமல் இருப்பதால் குப்பை அகற்ற முடிவதில்லையெனவும் தெரியவந்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், வாகனத்தில் ஒலி சமிஞ்ஞை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நகர சபை தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் அப்பகுதிக்கு குப்பை அகற்றும் வாகனங்கள் வரவில்லையெனின், நகர சபையுடன் தொடர்புகொண்டு, சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நடைமுறை ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையெனத் தெரிவித்துள்ள திருகோணமலை நகர சபை, இது வெற்றியடையும் பட்சத்தில் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இதேபோன்ற சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .