2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த புத்தாண்டில் தயாராகுங்கள்’

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு, அடுத்த ஆண்டு தொடக்கம் விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதால், அதற்கேற்ப, பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் செயலாற்ற வேண்டுமென, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் சந்திக்கின்ற பொதுப் பரீட்சைகளின் அடைவு மட்டங்களை அதிகரிக்கும் பொருட்டு, எதிர்காலத்தில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், ஒரு வருடத்தில், மூன்று பொதுப் பரீட்சைகளை மாணவர்கள் சந்திக்கின்ற நிலையில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறே, கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி வீதத்தில் பெரும் பாதிப்பைச் செலுத்துவதாகவும் அதில் கூடுதலாகக் கவனஞ்செலுத்த வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்காக, எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முதலாவது வேலைத்திட்டமாக, நிலையறி பரீட்சையொன்று, கடந்த மாதம் 28ஆம் திகதியன்று, மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் நடத்தப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரீட்சைப் பெறுபேற்றை, பாடசாலை, கோட்டம், வலயம் ஆகிய மட்டங்கள் கவனத்திற்கொண்டு, அடுத்தாண்டுக்கான செயற்றிட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ள அவர், இந்தச் செயற்றிட்ட முறைமையை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், தனதறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .