2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கு ’புதுவகையான நோய்த் தொற்று’

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கும் போது, புதுவகையான நோய்த் தொற்றுக்கு அவர் இலக்காகியுள்ளார் என எண்ணத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், எனவே ஜனாதிபதி, சிறந்த வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுவது, நாட்டு மக்களுக்கு நல்லதென்றும் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (08) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கூறிய அவர், ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி, தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்றும், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாப்பதற்காகவே, பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி சிறிசேன திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், ஜனாதிபதி கூறுவதைத் போன்று, வேறு ஒருவரைப் பிரதமராக நியமிக்கச் சம்மதித்தால், அது ஜனநாயகத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என, அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மைப் பலத்தை பெறாத ஒரு கட்சிக்கு, ஜனாதிபதி நினைத்ததைப் போல் பிரதமர் பதவியை வழங்க முடியும் என்ற மனநிலைக்கு, மக்களைத் திசைதிருப்ப இது வழிவகுக்குமென்றும், ஜனாதிபதி மேற்கொண்ட தவறான முடிவுகளால், இன்று நாட்டின் அரச, தனியார் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளனவெனவும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி, ஒருநாள் ஹிட்லர் போன்று செயற்படுகிறார், அடுத்தநாள் மிஸ்டர் பீன் போல் நடந்துகொள்கிறார்" என்றும் விமர்சித்தார்.

சில நேரங்களில் ஜனாதிபதியின் பேச்சுகளில், மஹிந்த ராஜபக்‌ஷ, எஸ்.பி. திஸாநாயக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரின் குரல்கள் வந்து செல்கின்றன என்றும், இம்ராம் எம்.பி, விமர்சித்தார்.

ஜனாதிபதியின் கைகளில் நிறைவேற்று அதிகாரம் இருப்பதானது, குழந்தையின் கையிலுள்ள பொம்மையைப் போன்றுள்ளதென்றுத் தெரிவித்த அவர், தன்னால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட முடியாது என அறிந்ததும், நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்டதில் தொடங்கிய அவரின் "வர்த்தமானி நோய்", இன்று அவர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த விழாவைப் புறக்கணிப்பதாக கூறிய ஹோட்டல் உரிமையாளர்களைப் பழிவாங்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வந்து முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கோபம் வந்தால், உடனே, ஒரு வர்த்தமானியை நாம் எதிர்பார்க்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .