2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நெற்செய்கை பாதிப்பு; நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 06 வயல் பிரதேசங்களில்  சுமார் 775 ஏக்கர் காணியில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அரக்கொட்டியான் சேதப்படுத்தி வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமுளங்குளப் பிரதேசத்தில் 153  ஏக்கரும் செஞ்சாலி பகுதியில் 180 ஏக்கரிலும்,  இலுப்பைக்குளப் பகுதியில் 155 ஏக்கரிலும்,  குயவனாறு பிரதேசத்தில் 160 ஏக்கரிலும், பொய்கை குளப் பகுதியில் 112 ஏக்கரிலும், நாவுலாறு பகுதியில் 15 ஏக்கரிலும், இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டிருக்கிறது.

இதில் சிலருடைய  வயல்கள், அரக்கொட்டியான் தாக்கத்தால்  முழுமையாகவும்   சிலருடைய வயல்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மேலும் சிலருடைய வயல்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டும் வருகின்றன.

இன்னும் இரு வாரங்களில் அறுவடை செய்யக் காத்திருக்கின்ற நேரத்தில், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது குறித்த விவசாயிகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

அரக்கொட்டியான் தாக்கத்தில் இருந்து நெற்கதிர்களைப் பாதுகாப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து, பூச்சி நாசினிகளைப் பலமுறை தெளித்தும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த டிசெம்பர் மாத இறுதிப் பகுதியில் தொடராகப் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே, இந்த அரக்கொட்டியான் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக, குஞ்சவெளி கமல நல சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இதனை ஓர் இயற்கை அனர்த்தமாகக் கருதி, பாதிக்கப்பட்ட  ஏழை விவசாயிகளுக்கு  உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X