2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அடித்துக்கொலை செய்தவருக்கு சிறைத் தண்டனை

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, தம்பலகமம் பிரதேசத்திலுள்ள முள்ளிப்பொத்தானைப் பகுதியில்  டெங்கு விழப்புணர்வுக் கடைமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு, 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, திருகோணமலை மேல் நீதிமன்றம், இன்று (09) தீர்ப்பளித்தது.

குறித்த குற்றவாளி, குற்றம் புரிந்த நேரத்தில் காணப்பட்ட மன நிலமையைக் கருத்தில்கொண்டு, சட்டரீதியாக  20 ஆண்டுகள்  சிறைத் தண்டனை வழங்கவேண்டிய தண்டனையைக் குறைத்து, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையாக வழங்குவதுடன், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது என, நீதிமன்றம் அறிவித்தது.

அபராதத்தைக் கட்டத்தவறும் பட்சத்தில், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையையும்  அனுபவிக்க நேரிடுமென, நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது.

2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நடந்த இச்சம்பவத்தின்  ஆரம்ப விசாரணைகள், கந்தளாய் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தால், திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்குப் பாரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியனால் நேற்று வழங்கப்பட்டது.

தம்பலகமம் பொலிஸ் பிரிவிலுள்ள முள்ளிப்பொத்தானை, சாலியபுர கிராமத்திலுள்ள செனவிரத்தின முதியானசலாகே வெல்கம என்பவரது வீட்டில் டெங்குப் பரிசோதனை செய்யச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் மீது, வீட்டு உரிமையாளரான எதிரி வெல்கம,  பொல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது கடுமையான தாக்குதலுக்குள்ளான பொதுச் சுகாதாரப் பரிசோதகரான முஹமட் பழில் என்பவர் மரணித்துள்ளாரென, பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்தது.

பொல்லால்  தாக்க வந்தமையை உணர்ந்த ஏனைய அதிகாரிகள் ஓடிய நிலையில்,  துரதிர்ஷ்டவசமாக அகப்பட்ட முஹமட் பழிலை, எதிராளி  பலமுறை  தலையில் “மொன டெங்கு” (என்ன டெங்கு) எனக் கூறித் தாக்கியதாகப் பொலிஸார் , நீதிமன்றில் தெரிவித்தனர்.

மரணித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் தலையில் 6 காயங்களும் எலும்பு உடைவுகளும் காணப்பட்டதாக  அரச  சட்டவைத்திய அதிகாரி சாட்சியமளித்தார். அத்துடன், சம்பவத்தை நேரில் கண்ட சக பொதுச் சுகாதாரப் பரிசோதர்களும் சாட்சியங்களை வழங்கினர்.

இதேவேளை, எதிராளி தொடர்பான மனநல வைத்தியரும் சாட்சியத்தை வழங்கினார்.

இதனையடுத்து, குறித்த நபரின் மனநிலை பாதிப்புத் தொடர்பான  அரச சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கைக்கு இணங்க, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட  “கொலைக் குற்றச்சாட்டை”, “கைமோசக் கொலை” குற்றச்சாட்டாகக் கருதி,   10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .