2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியிலுள்ளது’

பொன் ஆனந்தம்   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யுத்தம் மௌனித்த பிற்பாடு, பலவிதமான கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

“இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயகப்போராளிகள் கட்சியால் “திலீபனின் வழியில் நாங்கள்” என்ற இறுவட்டு வெளியீடு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர், இறுவட்டை வெளியிட்டுவைத்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மிகவும் மும்முரம் அடைந்நிருந்தது. அக்காலத்தில், இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் அட்டகாசம் புரிந்து வந்த நிலையில், எங்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமன்றி, அகிம்சை ரீதியாகவும் போராட்டத்தை நடத்த முடியும் என்ற செய்தியை உலகுக்குச் சொன்னவர் தியாகி திலீபன்.

“ஏறக்குறைய இரண்டு இலட்சம் மக்கள், இந்தப் போராட்டத்தில் உயிர் தியாகங்களைப் புரிந்துள்ளனர். உடமை இழப்புகளுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலைமையில் இன்றும் காணிகள் அபகரிப்புகளும் நிகழ்ந்த வண்ணமுள்ளன. காணாமல்போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் எனப் பலரும் பலவிதமான துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

“இவ்வாறானவர்களின் தியாக அற்பணிப்புக்கு நிற்சயமாக ஒரு நல்ல தீர்வை நாங்கள் எட்டியாக வேண்டும்.

“இலங்கை அரசாங்கத்திலே தமிழ் மக்களாகிய நாங்கள் எதையும் பெரிதாகக் கேட்கவில்லை. நாங்களும் இந்த நாட்டினுடைய மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமை வேண்டும், நாங்களும் பாதுகாப்பாக அரசியல் சுதந்திரத்தோடு வாழக்கூடிய நிலைமை ஏற்பட வேண்டும் என்று கேட்கின்ற நிலமையே, இன்று இருக்கின்றது. அதனை விடுத்து, பெரிதாக எதனையும் நாம் கேட்கவில்லை. இதனை சர்வதேசமும் ஒரு நியாயமான கோரிக்கையாக ஏற்றுள்ளது.

“ஆனால், இன்று ஒருவித மாற்றம் ஏற்படுகின்றது. இந்தநாட்டிலே நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். இதனால் வந்த இழப்புகள் போதும். இந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் இந்த நாட்டில் நாங்கள் சகோதரமாக வாழவேண்டும் எனப் பலரும் சிந்திக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .