2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்’

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட் 

கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான விசேட மாநாடு, ஆளுநர் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

இம்மாநாட்டில், இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே, மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை, விமானப்படை, இராணுவ, பொலிஸ்  அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், கிண்ணியா நகரசபைத் தலைவர்,  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்,  மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மண் அகழ்வு வியாபாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ‪

இந்த விடயங்கள் குறித்த நீண்ட நேரக் கலந்துரையாடலின் பின்னர், ஆளுநர் தனது உரையில், கிண்ணியா, மூதூரில் மண் அகழும் தொழிலை நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன எனவும் கடந்த ஒரு மாத காலமாக மணல் அகழ்வுத் தொழிலைத் தடை செய்ததை அடுத்து, மிக மோசமாக இம்மக்கள்  பொருளாதாரமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள செல்வந்தர்கள் இங்கே வந்து மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற போது, பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வறுமையோடு உள்ளார்கள் என்றும் இவ்வறுமையை ஒழிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பாதிக்கப்படாத வகையில், மீண்டும் மணல் அகழ்வுத் தொழிலை மக்கள் செய்வதற்குத் தேவையானவற்றை ஒழுங்கு செய்து, அவர்களுக்கு சட்ட ஒழுங்குப்படி அனுமதி வழங்கி, உரிய முறையிலே அவற்றைப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, புவிச் சரிதவியல் திணைக்களத்தினுடைய தலைவர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஷ்பகுமார தலைமையில் இராணுவ, பொலிஸ், கடற்படையினரைக் கொண்ட ஓர் உயர்மட்டக் குழு, ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, தங்களுடைய சிபாரிசுகளை எடுத்து, நாளை மறுதினம் (28) இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .