2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; பொதுமக்கள் ஆவேசம்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தீஷான் அஹமட், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்)

திருகோணமலை -  மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் பெரியபாலத்தில்  நேற்று  (11) இரவு 8 மணியளவில்  நடைபெற்ற விபத்தில், ஆலிம் நகரில் வசித்து வந்த எம். மஹ்சூன் (வயது 28) என்பவர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி நபர் மீது மோதியதாலேயே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் .

விபத்தை ஏற்படுத்திய பின்னர் டிப்பர் வாகனத்தின் சாரதி, வாகனத்தை நிறுத்தாது, தொடர்ந்து ஓட்டிச்சென்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பெரியபாலப் பகுதியில் ஒன்றுதிரண்டு டயர்களை எரித்ததோடு, மூதூர்  த்திரி சி.டி (3 CD) சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணையும் உடைத்தெறிந்துள்ளனர்.

அத்தோடு, பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் தோன்றியதோடு, கலவர நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பொலிஸாரை நோக்கி, பொதுமக்களால் கல்வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில், திருகோணமலையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, நள்ளிரவு 11.30 மணியளவில்  நிலைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு, போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியது.

மேலும், டிப்பர் வாகனத்தை விடுத்து, பொதுமக்களிடமிருந்த தப்பித்த சாரதி, மூதூர்  பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மூதூர் தள வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த நபரின் ஜனாஸாவை, மூதூர் நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன், இன்று (12) காலை பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு, ஜனாஸாவை அனுப்பிவைக்குமாறு, மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், மூதூரில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.

இதேவேளை, தூரப் பிரதேசங்களுக்கு மணலை எடுத்துச் செல்லும் டிப்பர் வாகனங்கள், ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாகப் பயணிப்பதால் இதற்கு முன்பும் இத்தைகைய விபத்துகள் பல ஏற்பட்டுள்ளனவென, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X