2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விழாவில் பங்கேற்றோர் விசனம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான் 
 
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து கம்பஹா மாவட்ட செயலகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கானபரிசில்கள் வழங்கப்பட்ட அரச இலக்கிய கலை பெருவிழாவில் தமிழ் மொழி மூலம் பரிசுபெற வருகை தந்தோர் பல்வேறு விசனங்களைத் தெரிவித்துள்ளனர். 

இப்பரிசளிப்பு விழாவானது கம்பஹா பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றதுடன்,கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வினால் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியில் வெற்றி பெற்றவர்களில்சிலர் கருத்துத்தெரிவிக்கையில்,
போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான கடிதங்கள் முறையாக அனுப்பப்படவில்லை. சிலரது கடிதங்கள் போட்டியில் வெற்றி பெற்ற இன்னொருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிலருக்குக் கடிதம் கிடைக்கவில்லை. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற போதும் ஒரு போட்டிக்கான கடிதமே அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரிசளிப்பு விழாவின் போது தமிழ் மொழி மூலம் வெற்றி பெற்ற ஒரு சிலருக்கே மேடையில் பெயர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்வு நிறைவடைந்த பிறகே வெற்றி பெற்ற போட்டியாளர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் முறையிட்டு தமக்கான பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணம் செலவழித்து பரிசில்களை பெறச் சென்ற போட்டியாளர்கள்,தமக்குரிய பரிசில்களையும் சான்றிதழ்களையும் திரை மறைவிலேயே பெற வேண்டியேற்பட்டமை துரதிர்ஷ்டமாகும். சகோதர மொழிப் பிரிவு போட்டியாளர்கள் ஒரு சிலருக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
  
இதேவேளை, மும்மொழிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்ட போதும் பரிசளிப்பு விழா சிங்கள மொழியில் இடம்பெற்றதுடன்,தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. 

இவ்விழாவில் சிங்கள மொழி மூலம் உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் பாராட்டும் வகையில் இடம்பெற்றன. ஆனால்,கம்பஹா மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். எனவே, ஓரிரெண்டு தமிழ் நிகழ்ச்சிகளையாவது மேடையேற்ற ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அத்துடன்,பரிசளிப்பு நிகழ்வின் போதாவது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .