2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’கூட்டமைப்புக்கு நிர்வாகம் தெரியாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாதெனவும், அவர்களின் நிர்வாகச் சீரின்மையினாலேயே தமிழ் மக்களால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியவில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கோட்டாபய, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

'தம் மக்களுக்கான அபிவிருத்திகளை அள்ளி வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், அதனைச் சரியான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உரிய நிர்வாகத் திட்டமிடல்கள் அவர்களிடம் இல்லை. கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாக வடக்கு மாகாணசபை அவர்களின் கையில் கிடைத்தும், அச்சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. இந்த நிர்வாகத் திறனின்மையாலேயே தமிழ் மக்கள் இன்னமும் துன்பத்தில் வாழ்கின்றனர்' என, கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

'எடுத்ததற்கெல்லாம் பைல்களுடன் நீதிமன்றப் படிகளில் ஏறத் தெரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், தம் மக்களின் அபிலாசைகளுக்காக எந்தப் பைல்களையும் முன்னகர்த்தத் தெரியவில்லை. அபிவிருத்திகளில் மாத்திரமன்றி அரசியலிலும் அவர்களது நிர்வாகம் பூச்சியத்தில்தான் இருக்கிறது. அரசியலில் நிர்வாகத் தன்மை இல்லாததால்தான், வன்னியில் குறைந்தளவு முஸ்லிம்களின் வாக்குகள் இருக்கின்றபோதிலும் ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் இலகுவாக அமைச்சர்களாகின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவாகிய ரிஷாட் பதியுதீன், தமிழ் மக்களின் வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக இருக்கிறார். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிர்வாகச் சீர்கேடு' எனவும் கோட்டாபய, சாடினார்.

'நிர்வாகத் திறன் மிக்கவர்களைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்யவேண்டும். இனிமேலும் விட்டுக்கொடுத்தும் பொறுத்தும் போகும் நிலைக்குள் தமிழ் மக்கள் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என்றபடியால், தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்துப் பயணிக்க வேண்டும். இனிவரும் காலங்களை அவதானமாகச் சிந்தித்துக் கடப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும்' எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் வடக்குக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .