2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

OL பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மாற்றுப் போக்குவரத்தை பயன்படுத்தவும்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுள் ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள், மாற்றுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.   

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (12) ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய, பழைய, புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைகள், எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.   

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கங்களால் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

இதேவேளை, பரீட்சை நடைபெறும் காலங்களில், கட்டட நிர்மாணப் பணிகள், பிரத்தியேக வகுப்புகள், விளையாட்டுகள், நிகழ்வுகள் என்பன இரத்துச் செய்யப்படுவது அவசியமாகும் என, பரீட்சைகள் பதில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   

அத்துடன், பரீட்சை மண்டபம் அமைந்துள்ள வளாகத்துக்குள் அங்கிகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

மேலும், பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியும் பரீட்சை மண்டபத்துக்குள் மோசடி செய்பவர்கள் பற்றியும் பரீட்சைகள் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.   

அத்துடன், மாற்றங்கள் ஏதும் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளலாம். இதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி தேவைப்படுவோர் 011 3188350, 011 2784 537, 0112 784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.   

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடித் தொடர்பு இலக்கமான 1911 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்   

இதேவேளை, பரீட்சார்த்திகள் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றின் மூலம் மோசடிகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .