2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’அரசமைப்பு சபையிலிருந்து வெளியேறியமை சபையை பாதிக்காது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியமை, அச்சபையின் நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று (09) அறிவித்தார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.

முன்னதாக எழுந்த அவர், “புதிய அரசமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்கான அசரமைப்பு நிர்ணய சபையிலிருந்து, தான் உள்ளிட்ட,

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஐவரும், வெளியேறுவதாக, தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம். எனினும், அது தொடர்பில் உங்களுடைய (சபாநாயகரின்) நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் இதுவரையிலும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை” என எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பிக்கள் ஐவரும், வெளியேறியதனால், அச்சபைக்கோ அல்லது சபையின் நடவடிக்கைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது” என்றார். குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம்.பி, “அரசமைப்பு நிர்ணய சபை வரைவிலக்கணத்தில், |முழு நாடாளுமன்றமும்| என்ற பதமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த சபையிலிருந்து எமது கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் ஐவரும், விலகியுள்ளதால்,  அச்சபை எப்படி முழுமையானதாக இருக்கும். அச்சபை முழுமையானதா? என்பதை தெரிவிக்கவேண்டும்” என்று, வினவினார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “முழு நாடாளுமன்றமும் என்ற பதமானது, அந்த நேரத்தில் கூடுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையாகும்” என்று விளக்கினார்.

மீண்டும் குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம்.பி,  “அப்படியானால், மூன்று அல்லது நான்கு, எம்.பிக்கள் கூடினாலும், அதனையும் அரசமைப்பின் நிர்ணய சபை என்று கூறமுடியுமா?” என்று கேட்டார்.

முடியும் என்று பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “சட்டவல்லுனர்கள், ஆலோசகர்கள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனைகளை பெற்றே, இந்த நிலைப்பாட்டை அறிவிக்கின்றேன்” என்றார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த விமல் வீரவன்ச எம்.பி, “சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குபவர்கள் யாரென்று எங்களுக்கும் தெரியும். அவர்களிடம் மிகமிகக் கவனமாகவே இருங்கள், சிறந்த சட்டவல்லுனர்களிடமே நீங்கள், சட்ட ஆலோசனைகளைப் பெறவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆம்...ஆம்... சிறந்த சட்டவல்லுனர்களிடமே, சட்ட ஆலோசனைகளை தான், பெறுவதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது பதிலளிக்கையில், மீண்டும் குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “ஆமாம்... ஆமாம்... என்னை போன்ற மிகச்சிறந்த சட்டவல்லுநர்களிடமே, சபாநாயகர் சட்ட ஆலோசனை பெறுகின்றார்” எனக் கூறியமர்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .