2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’அரசமைப்பை மதிக்காது, தோல்வியை நோக்கி நகருகிறதா இலங்கை?’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சபாநாயகர் தன்னை நீக்கவில்லையெனத் தெரிவித்த இரா.சம்பந்தன், தற்போதைய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் தக்கவைத்திருப்பதாகவே புலப்படுகின்றது என்றும் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில், பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியை இது தோற்றுவிக்கின்றது என்றும் கூறினார்.

இலங்கை, அதன் மிக முக்கிய சட்டமான அரசமைப்பை மதிக்காது, தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வி எழும்புவதாகக் கூறிய சம்பந்தன், பிளவுபடாததும் பிரிக்க முடியாததுமான இலங்கைக்குள், ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள், பெரும்பான்மைவாதச் சிந்தனையாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு, இன்று இந்த நாடு தள்ளப்பட்டுள்ளதெனக் கருதுவதாகக் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19), விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய சம்பந்தன், இந்தச் சூழ்நிலையானது, தமிழ் மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும், சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்பதாகக் கூறினார்.

அத்துடன், முழு நாட்டினதும் நன்மை கருதி, எமது மிகப் பிரதான சட்டமான அரசியல் யாப்பின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் முகமாக, தேவையான மாற்று நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2015ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர், செப்டெம்பர் 2015இல் நாடாளுமன்றம் கூடியபோது, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியில், இரண்டாவது அதி கூடிய ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், எதிர்க்கட்சி தலைவராகத் தன்னை ஏற்றுக்கொண்டதாகவும் நாடாளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்திலும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் அதிகூடிய ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராகத் தன்னை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டதாகவும் அந்தத் தீர்ப்பை சபாநாயகரான நீங்கள் வழங்கிய போது, “அதுவே எனது இறுதி முடிவு” என நீங்கள் (சபாநாயகர்) குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 18ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நியமிக்க வேண்டுமென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்களெனச் சபாநாயகரை நோக்கிக் கூறிய சம்பந்தன், இரண்டுமுறை மீளுறுதி செய்து எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த தன்னை, அப்பதவியிலிருந்து நீக்காமல், இந்த அறிவிப்பைச் செய்தது மாத்திரமன்றி, இந்தச் செயலானது, தற்போதைய நாடாளுமன்றத்தில், இருவர் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்து இருப்பதாகவே புலப்படுவதாகவும் மேலும், தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் தங்களுக்குப் பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியினை இது தோற்றுவிப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட அதிகளவு ஆசனங்களை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொண்டுள்ளதைக் கேள்விக்கு உட்படுத்த முடியாதெனக் கூறிய சம்பந்தன், நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், தன்னை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒரு சாரார், அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தமையே இதற்குக் காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகாரத் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது, பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஓர் அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இன்னும் பலர், அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும், கூட்டாக நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

“இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதானது, முறையற்றச் செயலாக அமைந்திருக்கும். இந்தப் பின்னணியில் தான், உலகெங்கும் கடைபிடிக்கப்படும் நாடாளுமன்றச் சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி, நாடாளுமன்றில் இரண்டாவதுப் பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கிகரிக்கப்படுவதை நடைமுறைப்படுத்தி, என்னை நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இரண்டுமுறை ஏற்றுக்கொண்டீர்கள்” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து, பிரதமர், அமைச்சரவை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் எமது அரசியல் யாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய, உயர் மட்ட நீதித்துறையால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த விடயங்கள் தொடர்பில் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தான், மேற்குறித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலும் தீர்மானமொன்று வழங்கப்பட்டுள்ளது என்றும் சம்பந்தன் கூறினார். 

நீதிமன்றத் தீர்ப்புக்கமைய, கடந்த 16ஆம் திகதியன்று பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை. நேற்றைய (நேற்று முன்தினம்) 18ஆம் திகதியன்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், சபையிலே கடந்து வந்து அரசாங்கத் தரப்பில் அமர்ந்து கொண்டன என்றுச் சுட்டிக்காட்டிய சம்பந்தன், அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்தப் பின்னணியில், அவசரமாக இன்னொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதனைத் தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.

தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை நீக்காமல், அப்படியான அறிவிப்பைச் செய்தமையானது, இருக்கின்ற விடயங்களை இன்னும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் மேலும், எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையானது, வெற்றிடமாக உள்ளதென்றக் குற்றச்சாட்டும் உள்ளதெனக் கூறினார்.

“நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர், நீங்கள் அறிவித்த அந்த நாளில், நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லை என்பதை, உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். நீங்கள் எடுத்தத் தீர்மானமானது, அவசரமாகவும் எமது அரசமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது” என, இரா. சம்பந்தன் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X