2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அரசமைப்பை மீறினால் குடியுரிமை பறிபோகும்’

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தத் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அரச தலைவர் என்ற வகையில், தங்களுடைய அதிகாரத்தை செயற்படுத்துமாறும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தியுள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரசமைப்பை மீறினால், குடியுரிமைகளை ஜனாதிபதி இழக்கவேண்டிய நிலைமையேற்படுமென எச்சரித்துள்ளார்.

2020 ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு சட்டரீதியாகவும் மற்றும் அரசமைப்பின் பிரகாரம் அனுமதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், 10 காரணங்களை முன்வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை நேற்று (28) அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தின் பிரதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் திறைசேரி செயலாளர் உட்பட அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1. அரசாங்கத்தின் செலவுகளை 2020.04.30 வரை மட்டுமே செலவு செய்யமுடியும். இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்த முன்னாள் நிதியமைச்சர் என்றவகையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,

2. ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தின் ஊடாக வரவு-செலவுத்திட்டத்தை முன்வைப்பதற்கான சந்தரப்பம் கிடைத்தும், அதிகாரத்திலிருக்கும் அரசாங்கம் அதிலிருந்து விலகிநின்றது.

3. 2019.11.16 அன்று ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருந்தது. 2020 நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது நல்லதல்ல என்பதே அன்றிருந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதனடிப்படையில் அன்றிருந்த அரசாங்கம், 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான நான்கு மாதங்களுக்கு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, 2019 ஒக்டோபர் 23ஆம் திகதி நிறைவேற்றிக்கொண்டது.

4. உங்களுடைய அரசாங்கம் 2019 நவம்பர் மாதம் ஆட்சி பீடமேறி மூன்று மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டாலும் 2020ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி, 15 நாள்களுக்குள் வரவு-செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்தது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

5. 2020 ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்குப் பதிலாக 2020 மார்ச் 2ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையைத் திருத்துவதற்கு, நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இயலாது. அதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதையடுத்து, அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டது. எனினும், நாட்டுக்குள் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம், நாட்டில் பொருளாதார பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.

6.கொரோனா வைரஸ் தாக்கம் வியாபிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த தேர்தலும் ஜூன் 20 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் அன்றையதினம் நடத்தப்பட்டாலும் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான திகதி குறிப்பிடப்படவில்லை.

7. 2019 ஒக்டோபர் 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி 2020 ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க செலவீனங்கள் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு முடியாது. திரைசேறி செயலாளர், நிதியமைச்சரின் அனுமதியின்றி, எந்தவொரு செலவுகளுக்கும் செலவிடமுடியாது. அவ்வாறு செலவிடப்படுமாயின் அது சட்டவிரோதமாகும்.

8. அரசமைப்பின் பிரகாரம்,நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்படாத நிலையில், அரசாங்கத்தால் செலவு செய்வதற்கு அவகாசம் இல்லை. அதுவே அரசமைப்பு விதியாகும்.

9. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள், திறைசேறியின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சகலரும் அரசமைப்பை மீறாமல் இருப்போமென உறுதிமொழியெடுத்து உறுதியளித்திருக்கின்றனர். அதனை மீறுகின்ற எந்தவொரு நபரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்படும் பொழுது, ஏற்பாடுகளை மீறியிருக்கும் யாராக இருந்தாலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டால்

ஏழு வருடங்களுக்கு குறையாத குடியியல் உரிமை இரத்தாகும்.

அத்துடன், குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பராமரிக்க தேவையான நீதிமன்ற உத்தரவால் நிர்ணயிக்கப்பட்ட சொத்து தவிர, குடும்பத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

10. எனவே, இந்த அபாயங்களைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தரப்பினரின் உதவியுடன், 2020.04.30க்குப் பிறகு, அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட, வரவிருக்கும் செலவுகளை மறுபரிசீலனை செய்வதற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் மங்கள சமரவீர மேலும் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .