2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசாங்கத்துக்கு 3 மாதங்கள் காலக்கெடு

Editorial   / 2019 ஜூலை 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருமித்த இலங்கைக்குள், தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பை, பிராந்தியங்களதும் தேசிய இனங்களதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, இத்தீர்மானங்களை நிறைவேற்ற, அரசாங்கத்துக்கு மூன்றுமாதக் காலக்கெடுவையும் விதித்துள்ளது.

அத்துடன் நெல், வெங்காயம் முதலான வேளாண்மை விளைச்சல், மீன் வளம், பனை வளம் முதலான உற்பத்திப் பண்டங்களுக்கு நியாய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு, நேற்று (30), யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, கட்சித் தலைவரால், இந்தத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்போது அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

1. இலங்கை அரசாங்கமானது, ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கிகரிக்கும் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும்.

2. தமிழின அடையாளங்களை அழிக்கும், இனக்குடிப் பரம்பலைக் குலைக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

3. தமிழ் - முஸ்லிம் மக்களுக்குரித்தான சொந்த நிலங்களில் அகதிகளாயுள்ள மக்கள் மீளக்குடியேற்றப் பொருத்தமாக அக்காணிகளை அபகரித்து நிற்கும் இராணுவத்தினர் வெளியேறிச் செல்ல உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் மீள்குடியேற்றங்கள், மீள் நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான நிதிகளையும் வளங்களையும் உடன் விடுவிக்க வேண்டும்.

5. காணாமற்போனோர் விடயத்தில், அரசு உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும். 

6. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். நீண்ட காலம் சிறையில் சீரழியும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

7. வடக்கு, கிழக்குப் பிரதேச வேலைவாய்ப்பற்ற இளைய சமுதாயத்துக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

8. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், கனிமவள திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை முதலான திணைக்களங்கள், மக்களின் மீள்குடியேற்றப் பிரதேசங்களிலும் மக்கள் வாழ்விடங்களிலும், மக்கள் விவசாய நிலங்களிலும் எழுந்தமானமாக ஊடுருவி கையகப்படுத்துவது மற்றும் மீள் நிர்மானப் பணிகளுக்குத் தடை விதிப்பதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

9. பௌத்த அடிப்படைவாதிகள், இந்து மக்கள் கோவில்களில் இந்துக் கலாசார மையங்கள், புனித பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு செய்து, புத்தர் சிலைகளையும் விக்கிரகங்களையும் கட்டிவரும் அத்துமீறல் அடாவடித்தனங்களுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. இன்றுள்ள அரசமைப்பில் இணைக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென, பொதுஜன பெரமுனாவும் 24 மகிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பெருமெடுப்பில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

11. ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 தீர்மானங்கள் முழுமையாக அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவையும், சர்வதேச சமூகமும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இம்மாநாட்டிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள், அரசாங்கம் நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானித்துள்ளது என்றும், அக்கட்சின் தலைவர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .