2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகினார் முகாபே

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே ஜனாதிபதி றொபேர்ட் முகாபே, தனது பதவியிலிருந்து விலகுவதாக, உத்தியோகபூர்வமாக நேற்று (21) அறிவித்தார். அவரது அரசியல்ரீதியாக நண்பர்களும் அந்நாட்டு இராணுவமும், அவருக்கு எதிராகத் திரும்பியிருந்த நிலையில், சுமார் 4 தசாப்தங்களாக நீடித்த ஆட்சி, நேற்று முடிவுக்கு வந்தது.

93 வயதான முகாபே, இராணுவப் புரட்சியை முகங்கொடுத்திருந்ததோடு, கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். அவற்றுக்கு மத்தியிலும், பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரது பதவி, நூலிழையிலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், அவரைப் பதவியிலிருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள், நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இது, கடினமான அரசியல் மாற்றமாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜனாதிபதிப் பதவியிலிருந்து முகாபே விலகிவிட்டாரென, நாடாளமன்றத்தின் சபாநாயகர் ஜேக்கப் முடென்டா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பதவி விலக்கல் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

1980ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றமை முதல், இரும்புக்கரம் கொண்டு சிம்பாப்வேயை ஆண்டு வந்த முகாபே, தனது மனைவியின் அரசியல் பிரசன்னத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்த முயன்றே, தனது பதவியையும் இழந்துள்ளார் என்று கருதப்படுகிறது.

உப ஜனாதிபதியாக இருந்த எமர்ஸன் மனங்கக்வாவை, அப்பதவியிலிருந்து நீக்கி, அதன் மூலம், தனது மனைவிக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இராணுவத்தினரிடத்தில் அதிக மரியாதையையும் ஆதரவையும் கொண்டிருந்த மனங்கக்காவின் நீக்கத்தை, இராணுவத்தினர் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனாலேயே, இராணுவப் புரட்சி ஏற்பட்டது.

அவர் பதவி விலகினாலும், அடுத்த தலைவராக யார் வருவாரென்பது, இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. இன்று (22) இரவுக்குள் அது உறுதியாகுமெனத் தெரிகிறது.

முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து, தலைநகர் ஹராரேயின், மக்கள் தமது கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களில் ஒலியெழுப்பிய மக்கள், மகிழ்வாக ஆடிப் பாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .