2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’ஆட்சேபனை மனு நிராகரிப்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் தாக்கல் ​செய்திருந்த ஆட்சேபனை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (13) நிராகரித்தது.

மேற்படி ஆட்சேபனை மனு, ஜனத் டி சில்வா, குமுதினி விக்கிரமசிங்க ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே, அதனை, நீதியரசர்கள் குழாம் நிராகரித்தது.

அதனையடுத்து, வடமாகாண முன்னாள் முத​லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆனந்தி சசிதரன், கே.சிவாஜிலிங்கம் ஆகியருக்கு எதிராக, நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

அதனடிப்படையில், நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழான மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதென, நீதியரசர்கள் குழாம், நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று (13) கொண்டுவந்தனர்.  

நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லையெனத் தெரிவித்து, விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர், இதற்கு முன்னர் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, ஆட்சேபனையை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணைகளிலிருந்து நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்க விலகிக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளமையால், மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான புதிய நீதியரசர் குழாமை நியமிப்பதற்காக, மேற்படி வழக்கு, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரன், முதலமைச்சராகக் கடமையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கெதிராக, ஏற்கெனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்திருந்த தீர்மானத்தை நடமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தத் தடையுத்தரவு இதுவரையிலும் அமுல்படுத்தப்படவில்லையென, மனுதாரர் தரப்பில் நேற்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X