2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இருபதாவது திருத்தத்துக்கு 2/3 தேவை

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் செயற்பாட்டு ஷரத்துகள் அரசமைப்புக்கு முரணானவை என்றும் இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களால் அங்கிகரிக்கவும் பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (19) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்.

சகல மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துதல், முன்கூட்டியே கலைக்கப்படும் மாகாண சபையொன்றின் அதிகாரங்களானது ஏனைய அனைத்து மாகாண சபைகளும் கலைப்படுவதற்கு குறித்துரைக்கப்படும் திகதி வரை நாடாளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படல் உள்ளிட்ட ஏற்பாடுகளையே இந்த 20ஆவது திருத்தம் கொண்டிருந்தது.

அந்த,  அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அதனது வியாக்கியானத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் ஏகமனதான தீர்மானமாக அன்றி பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானமாகவே இது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த, உயர்நீதிமன்றத்தின் அந்த வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு அறிவிக்கையில்,
‘சட்டமூலத்தின் 2, 3 மற்றும் 4 ஆம் ஷரத்துகள் அரசியலமைப்பின் 3, 4, 12(1) மற்றும் 14(1) ஆம் உறுப்புரைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அரசியலமைப்பின் 80 ஆவது உறுப்புரைக்கு இணங்க மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களினது எண்ணிக்கையில் (சபைக்கு சமுகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட) மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு குறையாத ஆதரவு வாக்குகளுடன் (சபையில்) நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களால் அங்கிகரிக்கப்பட்டவேண்டும்.

அதன் பேரில், ஜனாதிபதியால் சான்றிதழொன்று ஒப்புதலளித்து கையெழுத்திடப்படும் பட்சத்திலேயே அரசமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்திருப்பதாக சபாநாயகர் இதன்போது சபைக்கு அறிவித்தார்.  அரசமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மொத்தமாகவே 5 ஷரத்துக்கள் மட்டுமே காணப்படுவதுடன், அவற்றில் 2,3 மற்றும் 5 ஆவது ஷரத்துக்களே செயற்பாட்டு ஷரத்துக்களாக காணப்படுகின்றன.

அதன் பிரகாரம், அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாகவிருக்க வேண்டிய திகதியை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 2 ஆவது ஷரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், கலைப்பதற்கென குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக முடிவடைகின்ற ஏதேனும் மாகாண சபையின் பதவிக்காலம் குறித்துரைக்கப்பட்ட அந்த திகதி வரை நீடிக்கப்பட வேண்டும், குறித்துரைக்கப்பட்ட அந்த திகதிக்கு அப்பால் தொடர்ந்திருக்கின்ற ஏதேனும் மாகாண சபையின் பதவிக்காலம் அந்த திகதியன்று முடிவடைய வேண்டும் என்பதுடன், அந்த திகதியன்று அது கலைக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 3 ஆவது ஷரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், யாதேனும் காரணத்துக்காக மாகாண சபையொன்று முன்கூட்டியே கலைக்கப்படும் பட்சத்தில், அத்தகைய மாகாண சபையின் அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படுவதற்கு குறித்துரைக்கப்படும் திகதி வரை நாடாளுமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 4 ஆவது ஷரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மேற்படி ஷரத்துகள் மூன்றுமே அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதன் காரணத்தால், அச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவதுடன் மட்டுமல்லாது, சர்வஜன வாக்கெடுப்பொன்றினால் மக்களால் அங்கிகரிக்கவும் படும் பட்சத்திலேயே சட்டமாகும் என்று உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இதன்போது எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  சகல கட்சித் தலைவர்களுக்கும்  கிடைப்பதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டார். அதற்கு பதலிளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .