2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இறுதிப் போரில் இடம்பெற்ற தவறுகள்; தீர்த்துக்கொள்வதற்கான நீதிப்பொறிமுறை இலங்கையில் இன்றுள்ளது'

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அழகன் கனகராஜ்

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் உறவு மிகவும் பலமானதாகவும் வலுவானதாகவும் மாறியுள்ளதென்றுத் தெரிவித்த அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா, இறுதி யுத்தத்தில் எத்தகைய தவறுகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான நீதிப்பொறிமுறை, இலங்கை இன்று உள்ளதென்றார்.

நாடாளுமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திரிகளது சிறப்புரிமைகள் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இருள் சூழ்ந்த யுகத்தில் இருந்த இலங்கையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தோம் என்றார்.

இராணுவத்தினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டோம் என்றும் விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டெழுந்தோம் என்றும் கூறிய அமைச்சர், போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெறும் அபாயம் காணப்பட்ட ​நிலையில், சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு இருந்த அனைத்து அச்சுறுத்தல்களையும் முறியடித்து, பலமானதாக சர்வதேச உறவை விரிவடையச் செய்துள்ளோமென்றுக் கூறினார்.

“சர்வதேச நாடுகள் விதிக்கவிருந்த பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டது மாத்திரமன்றி, ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளவும் பெற்றுக்கொண்டோம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடையை விலக்கிக் கொண்டோம். என்றாலும், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக, தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக மக்கள் மத்தியில் பொய்க் குற்றச்சாட்டுகளை எதிரணியினர் கூறுகின்றனர்” என, அமைச்சர் அஜித் பி.பெரேரா கூறினார்.

இதேவேளை, இராணுவத்தினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, யுத்தத்தின் போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, ஜனநாயக வழியில் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையொன்று, இன்று எமது நாட்டில் உள்ளதெனத் தெரிவித்த அவர், பலமான அரசமைப்புச் சட்டங்களும் நீதித்துறையும் உள்ள நிலையில், அதன்மூலம் சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடிந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தில் எத்தகைய தவறுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை நாட்டில் உள்ளதென, அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X