2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கன்னியா விவகாரம் தொடர்பில் விசாரிப்பதாக ஜனாதிபதி உறுதி’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியா விவகாரம் தொடர்பில் விசாரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசியபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக, முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கூறியுள்ளார்.

தனது பதிவில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, கன்னியாவில், விகாரை கட்டும்படி தொல்பொருள் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன், இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திக்க என்னிடம் அவர் உடன்பட்டதுடன், இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும்.

இதையடுத்து, இவ்விவகாரம் பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து நான் கூறியுள்ளேன்.”  என, அமைச்சர் மனோ கணேசன் முகப்புத்தக பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .