2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’காணாமல்போனோரின் உறவினர்களை, ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பதில் உண்மை இல்லை’

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19 ஆம் திகதி  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  கல்லூரி வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்தார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, காணாமல்போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னறிவித்தலின்றி புனித பத்திரிசியார் கல்லூரியின் வளாகத்திற்குள் வருகை தந்திருந்த, அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட காணாமல் போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை, சந்தித்ததோடு  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கமைய காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தினூடாக நியாயமான தீர்வுகள் அவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

மேலும்,  அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமல் போனோரின் உறவினர்களால் ஏற்கனவே வேண்டுகோள் எதுவும்  விடுக்கப்பட்டிராத நிலையிலேயே  இந்த சந்திப்புக்கு  வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

ஆயினும் ஜனாதிபதி  காணாமல் போனோரின் உறவினரை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும்,  இச்செய்தி திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .