2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கை’ இருக்கும் வரை ‘மொட்டு’ மலராது

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதையே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாகவும் எனினும், சிலர் தங்களின் சுயலாபம் கருதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக, அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரும், வி​ளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல்  திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுப்படுத்த முயல்வதாக நீங்கள்  குறிப்பிடும் அந்த இருவர் யார்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே இவ்வாறு செயற்படுகின்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். எனினும், பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக்  கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.

கேள்வி: நாளாந்தம் எத்தனை பேர் இணைகின்றனர்?

பதில்: ஒருவர், இருவர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வந்து இணைகின்றனர்.

கேள்வி: பொதுஜன பெரமுன அணியினர் பல பகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன​ர். அவர்கள் தேர்தலில் வெற்றிப்பெறுவது உறுதியா?

பதில்: தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுன என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. அவர்கள் எண்ண நினைக்கிறார்கள் என்றால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவ்வகையிலாவது பிளவுபடுத்தி, தாங்கள் இடம்​பிடித்த விடலாம் என்று. அவ்வாறு நடக்கப்போவதில்லை. தேர்தலின் பின்னர் அவர்களின் இருப்பே கேள்விக் குறியாகிவிடும். கிராமப் புறங்களில் பொதுஜன பெரமுன என்ற ஒன்று இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அவர்களுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்படடது. இறுதிகட்ட கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் கலந்துரையாடல்  வெற்றியளிக்கவில்லை. அதனை அவர்களே நிராகரித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமாகவே உள்ளது.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் அண்மையில் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்ன? நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கத் தரப்பில் தாங்கள் எதனைக் கூறுகிறீர்கள்?

பதில்: பசில் ராஜபக்ஷவுடன்  ஜனாதிபதி கலந்துரையாடலை​ மேற்கொண்டார் என எனக்குத் தெரியாது. ஆனால், கலந்தரையாடியதாக கூறப்படுகிறது. எது எவ்வாறாக இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையாமல் எவ்வாறு பாதுகாப்பது, என்பது தொடர்பிலேயே எந்த முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார். எனினும், முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கிறோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .