2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கைதை தடுக்க மனு’

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரியும்,கைது செய்வதற்கான நகர்வுகளுக்கு எதிராகவும், இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.   

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவே, தன்னைக் கைதுசெய்வதற்கு முயல்வதாகவும் அந்தப் பிரிவு, இனவாத விரோதத்தைத் தூண்டுவது தொடர்பிலே தனது விசாரணையை ஆரம்பித்தது. எனினும், முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல், கைதுசெய்வதற்கு அப்பிரிவு முயல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடைய சட்டத்தரணியின் ஊடாகவே அவர், அந்த மனுவை, நேற்று (13) தாக்கல் செய்துள்ளார்.   

மனுவில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உட்பட நால்வர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.   
இதேவேளை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டாரென குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரரை கைது செய்வதற்கு, பிடியாணை பிறப்பிக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (12) கோரியிருந்தது.   

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, வழக்குக்கு சமுகமளிக்காமல், பல்வேறான குற்றச்சாட்டுகளை ஞானசார தேரர் முன்வைத்து வருகின்றார். ஆகையால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கவேண்டுமென கோரியிருந்தார்.   

எனினும், அந்த கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் நிராகரித்துவிட்டது.   

எனினும், அடுத்த தவணையின் போது, நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காதுவிட்டால், அவரை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று ஞானசார தேரர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியை மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை கடுமையாக எச்சரித்திருந்தது.   

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றத்துக்குள் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று, ஞானசார தேரர் திட்டியிருந்தார்.   

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குள் வைத்து, ஞானசார தேரர் நடந்துகொண்ட முறை, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தை, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க கோரியிருந்தார்.   

அந்த மனு இரண்டு தடவைகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதிலும், நீதிமன்றத்துக்கு ஞானசார தேரர் சமுகமளித்திருக்கவில்லை. எனினும், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே, அவர் சமுகமளிக்கவில்லையென, அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.   

இதேவேளை, இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்த, திகதிகளை குறித்தது.   

இந்நிலையிலேயே, தன்னை கைது செய்யாமல் இருப்பதற்கான மனுவை, ஞானசார தேரர் தன்னுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.   

இதேவேளை, நாட்டைவிட்டு அவர் தப்பிச்செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .