2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சேற்றுக்குள் மைத்திரியை தள்ளிவிட முயற்சி’

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அலரிமாளிகையில் நேற்று (11) இடம்பெற்ற முக்கியமான இரண்டொரு சந்திப்புகளில் பங்கேற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர், பல முக்கிய விடயங்களை, பிரதமரின் காதுகளுக்குப் போட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அந்தச் சந்திப்புகளில் பங்கேற்றிருந்த ஐ.தே.க முக்கியஸ்தர்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமளிதுமளி, தன்னுடைய பதவிக்காலம் தொடர்பிலான வியாக்கியானத்தை, உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளமை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புபட்ட முக்கிய விடயங்களையே, பிரதமரின் காதுகளுக்குப் போட்டு வைத்துள்ளனர்.   

“ரணில் ஹொரா! ரணில் ஹொரா! என ஆரம்பமான கோஷம் இறுதியில் மஹிந்த ஹொரா! ​மஹிந்த ஹொரா! என நிறைவடைந்துவிட்டது” என ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, மௌனத்தைக் கலைத்துவிட்டார்.  
இதன்போது குறுக்கிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, “சேர்! சேர்! பிணைமுறி விவகாரம் தொடர்பிலான அறிக்கை பற்றியல்ல. உங்களுடைய டான்ஸ் (நடனம்) பற்றித்தான் மக்கள் பரவலாகப் பேசிக்கொள்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.   

கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில், திருமண நிகழ்வொன்றில், மூத்த நடிகை இராங்கனி சேரசிங்கவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நடனம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இதனிடையியே குறுக்கிட்ட, அமைச்சர் தயா கமகே, “அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஆண்டிலா அல்லது 2021ஆம் ஆண்டா நிறைவடைகிறது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கேட்டதும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.   

“உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கேட்டு அனுப்பியிருப்பதில், எவ்விதமான சட்டபூர்வமான தடையும் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, 2019 ஒக்டோபர் மாதமளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் விடுக்கவேண்டும்.   

“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தால், இல்லை, இல்லை ஆறுவருடங்க​ள் எனக்கூறி, உயர்நீதிமன்றத்துக்கு, ஜனாதிபதி செல்லலாம்.   

“ஜனாதிபதி பதவிக்காலம் 6 வருடங்களென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தால், 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், பதவிக்காலமானது 5 வருடங்களைக் கொண்டதாகுமென, ஏனைய தரப்பினர், நீதிமன்றத்தை நாடமுடியும்” என அவ்விடத்திலிருந்த ஐ.தே.கவின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.   

இதனிடையே கருத்துரைத்த பதுளை மாவட்ட எம்.பியான சமிந்த விஜேசிறி, “ஜனாதிபதியைச் சுற்றியிருக்கின்ற, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களே, ஜனாதிபதியை மீண்டுமொரு தடவை சேற்றுக்குழிக்குள் தள்ளிவிடுவதற்கு முயல்வதாக, எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” தெரிவித்துள்ளார்.  

“பிணைமுறி விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சி விழுந்துவிட்டது. அப்படி எண்ணிதான், இன்னுமொரு வருடத்தை நீடித்தக்கொண்டால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். அதற்கு எதிராக, கையை நீட்டவும் மாட்டார்கள் என்று எண்ணிதான், வியாக்கியானம் கேட்பதற்கு திட்டமிடப்பட்டதாக, எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” என மஹிந்த விஜேசிறி எம்.பி தெரிவித்துள்ளார்.   

அவ்விடத்திலிருந்த அமைச்சர் வஜிர அபேவர்தன, “ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலம் தொடர்பிலான வியாக்கியானத்தை, உயர்நீதிமன்றத்திடம் கேட்பேன் என உங்களிடம் இதற்கு முன்ன​ரே கூறியிருந்தாரா? என, பிரதமரிடம் கேட்டுள்ளார்.  

அதுவரையிலும், சகலதையும் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “என்னிடம் ஏற்கென​வே எதுவுமே கூறவில்லை. அப்படிக் கூறிவைப்பதற்கான தேவையும் இல்லை.  “ஜனாதிபதியை அதிகாரத்தில் ஏற்றுவதற்கு உதவியளித்த, எந்தவொரு கட்சியிடமும் இந்த விவகாரம் தொடர்பில், ஆலோசனை கேட்கப்படவில்லை. அவ்வாறு பங்காளியாக இருந்த கட்சிகளின் தலைவர்களிடமும் கேட்கவில்லையென, கட்சித் தலைவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.   

”அப்படியாயின், 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆதரவு நல்கிய கட்சிகள், தங்களுடைய நிலைப்பாடுகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியும்” என ஐ.தே.கவின் சட்ட ஆலோசகர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.   

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கருத்துரைத்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, “பிரதமருக்கு எதிராக கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்புலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் இருக்கின்றனராம்” எனத் தெரிவித்துள்ளார். “கொண்டு வரச்சொல்லுங்கள், இதற்கு முன்னர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு என்ன நடந்தது. வெற்றி பெற்றதா? பிரேரணை கொண்டுவரும் அவர்களே, அதனை பின்னர் வாபஸ் பெற்றுக்கொள்வர்” என புண்முறுவலுடன் கூறியுள்ளார் பிரதமர்.   

“பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டுமென, அண்மையகால ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெற்றிக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தனி ஆட்சி வேண்டுமென்று, கிராம மட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்” என அவ்விடத்திலிருந்த அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தயா கமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.   

“நாட்டை மீட்டெடுத்து, கட்டியெழுப்பி, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கே யாரும் நினைக்கவேண்டும். தனி ஆட்சி தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கதைப்போம்” எனக்கூறியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றுமொரு கூட்டத்துக்கு, அலரிமாளிகையிலிருந்து சென்றுவிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X