2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஞானசார தேரருக்கு 6 மாத சிறை

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை திட்டித்தீர்த்து, அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, 6 மாதங்கள் அனுபவிக்கவேண்டிய ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை, நேற்று (14) விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசார தேரரை, குற்றவாளியென, மே மாதம் 24ஆம் திகதியன்று அறிவித்திருந்த ஹோமாகம நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க, வழக்கின் தீர்ப்பு, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று வழங்கப்படுமென, அன்று அறிவித்திருந்தார்.

வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்படவிருந்தமையால், ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகம், காலையிலிருந்தே பெரும் பரபரப்பாக இயங்கியது. ஞானசார தேரர் வருகைதருவதற்கு முன்னர், அவருடைய ஆதரவாளர்களும், இன்னும் சில தேரர்களும், நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தனர். காலை 9:30 மணியளவில் ஞானசார தேரர் வருகைதந்தார்.

செய்திகளைச் சேகரிப்பதற்காக வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களும் உள்ளூர் ஊடகவியலாளர்களும் திரண்டிருந்தனர். பொதுமக்களும், வழமையான வழக்கு நடவடிக்கைகளுக்கு வருவோரும், வருகைதந்திருந்தனர்.

அதுமட்டுமன்றி, நீதிமன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. தண்ணீர் பீச்சியடிக்கும் பொலிஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. கலகமடக்கும் பொலிஸார், ஆங்காங்கே உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மேலதிகப் பொலிஸ் படையணியொன்றும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்துக்குள் சென்ற சகலரும், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர், குற்றவாளியின் கூண்டில், ஞானசார தேரர் ஏற்றப்பட்டார். தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர், ஏதோவொன்றை கூறவேண்டுமென, ஞானசார தேரர் தெரிவித்தார். அதற்கு, நீதவான் அனுமதியளிக்கவில்லை. மற்றொரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவிடவேண்டாமென, அறிவுரை வழங்கினார்.

தீர்ப்பின் பிரகாரம், முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக, நீதிமன்றம் இனங்கண்டுள்ளமையால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாதச் சிறைத்தண்டனை விதித்து, நீதவான் தீர்ப்பளித்தார். ஆனால், இரண்டின் தண்டனைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டமையால், 6 மாதங்களுக்கே அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியேற்படும். அத்துடன், 3,000 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நட்டஈட்டுத் தொகையை, ஒரே தடவையில் செலுத்தவேண்டுமெனத் தீர்மானித்த நீதிமன்றம், அவ்வாறு செலுத்தவில்லையாயின், சிறைத் தண்டனை மேலும் மூன்று மாதங்களுக்கு  நீடிக்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேரின் விளக்கமறியலும், ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவால், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று நீடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், நீதிமன்ற வளாகத்திலிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதுடன், சந்தியா எக்னெலிகொடவை திட்டித்தீர்த்து, அச்சுறுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில், சந்தியா எக்னெலிகொட, ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டுக்கமைய, ஞானசார தேரருக்கு எதிராக,  குற்றவியல் தண்டனை சட்டத்தின் இல. 386இன் கீழ் அடக்குமுறைக்கு உள்ளாக்கியமை மற்றும் இல, 486இன் கீழ் குற்றவியல் அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வ​ழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், மேற்படி வழக்கில் ஞானசார தேரரை குற்றவாளியென இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு மேற்படி தண்டனையை விதித்தது.  
இதேவேளை, மே மாதம் 24ஆம் திகதியன்றே, அவரது கைவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டமையால், தயார் நிலையிலிருந்த சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்பட்ட ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்திலிருந்து தேரர்கள் பிரித் ஓதினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X