2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தாயகம் உறவுகளின் கண்ணீர் மாவீரர்களின் கல்லறைகளை கழுவின

Editorial   / 2017 நவம்பர் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூர்ந்து, ஒருவாரமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் வாரத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டன.   

நவம்பர் 26ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளாகும். அந்நாளை, உலக வாழ் தமிழர்கள், எழுச்சிபூர்வமாகக் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், உணர்வுபூர்வமாய் நேற்று (27) இடம்பெற்றன.   

வடக்கு, கிழக்கில் உள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் மாவீரர்களின் கல்லறைகள் இருந்த இடங்கள், ஏற்கெனவே நினைவுகூரப்பட்ட இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுடரேற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. சிற்சில இடங்களில் இரத்த தானமும் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வுகளையொட்டி, அப்பிரதேசங்களின் முக்கிய இடங்கள் மஞ்சள், சிவப்பு நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மிகநெருங்கிய உறவினர்களும் அதேநிறத்​தில் ஆடைகளை அணிந்திருந்தனர்.   

அத்துடன், மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் இருந்த இடங்களும் சுத்தம் செய்யப்பட்டு, அதே​ வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனால், மாவீரர் துயிலுமில்லங்களும், எழுச்சியுடன் மிகவும் கம்பீரமாய் காட்சியளித்தன. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், நவம்பர் 27ஆம் திகதி, மாலை 6.05 மணிக்கு வணக்கஸ்தலங்களிலும் மணிஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும். இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றுவர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர்.  

அதன்பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விசேட உரையொன்றை ஆற்றுவார்.   

நேற்றையதினமும், மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளுக்கும் ஈகைச்சுட​ரேற்றி, சோகமே தாழாது கல்லறைகளைக் கட்டிப்புரண்டு, கதறியழுதனர். இன்னும் சிலர், மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி, இறைவணக்கம் செய்தனர்.  

கம்பீரமாய் காட்சியளித்த கல்லறைகள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிதைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு சிதைக்கப்பட்டிருந்தாலும், தீப ஒளியேற்றப்பட்டதன் பின்னர் உயிரூட்டதைப்போலவே கல்லறைகள் காட்சியளித்தன.   

விடுலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் பெற்றோர்கள் கதறியழுத்து, கண்ணீர் மல்கினர். இதனால், மாவீரர் துயிலும் இல்லங்கள், அவர்களின் வீடுகள் மட்டுமன்றி, வடக்கு, கிழக்கே பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது.  

வடக்கு, கிழக்கில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்த போதும், மிகவும் உணர்வுபூர்வமாகவே மாவீரர் தினம் நினைவுகூரப்பட்டது. மழைநீர் தாய்மண்ணை நனைக்கையில், உறவுகளின் கண்ணீர் கல்லறைகளை கழுவின.  
துயிலும் இல்லங்களுக்கு அழுதுபுரண்டவர்கள், கல்லறைகளைத் தட்டி, நீண்ட துயிலிலிருக்கும் உறவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தனர். கல்லறைகள் மற்றும் நினைவிடங்கள், அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்ட உறவினர்கள், தங்களுடைய உறவினர்களின் புகைப்படங்களை பொது இடமொன்றில் வைத்து, மலர்தூவி, அழுது குலாவி அஞ்சலிசெலுத்தினர்.   

க​ல்லறைகளில் கரைபுரண்ட உறவுகளால் சிந்தப்பட்ட கண்ணீரில், கல்லறைகள் மட்டுமன்றி, அந்தப் பூமியே தோய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X