2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘ தீர்ப்பை ஏற்கமுடியாது‘

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கு விஜயம் ​செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம், மறப்போம், மன்னிப்போமெனத் தெரிவித்திருந்தமைக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் உரைக்கு குறுக்கறுத்து அநாகரிகமாகப் பேச முடியாத சூழல், அன்றிருந்தது. பிரதமரின் கூற்றுக்குத் தொடர்ந்து பதிலளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணம், கோண்டாவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுக்காலை (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இராணுவம் குற்றம் புரிந்திருக்கின்றது, தமது அரசாங்கம் கொடுமை இழைத்துள்ளது என்பதை பிரதமர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டாலும் கூட, அதை நாங்கள் மறப்பதால், அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து,

நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக் ​கேட்டுக்கொண்ட அவர், அதன் பின்னர் தீர்வு என்ன என்பது பற்றி தமிழர்கள் முடிவு எடுக்க முடியுமே தவிர, குற்றங்களைப் புரிந்துவிட்டு, தீர்வைத் தாமே சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றார். 

பிரதமர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்ற போது, அவரின் உரையை குறுக்கறுத்து அநாகரிகமாக பேச முடியாத சூழல் இருந்ததெனக் குறிப்பிட்ட அவர், ஒரு பிரதம அமைச்சரின் தலைமையில் கூட்டம் நடைபெறுகின்ற பொழுது, நாடாளுமன்றம் போன்றோ, விவாதத்தின் போதே, இடையீடு செய்து கருத்துச் சொல்வதற்கு இடமளிக்கப்படாது என்றார்.  

இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் போயும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். பல குழந்தைகள் கஞ்சி கூட இல்லாமல் பட்டினியால் கொல்லப்பட்டுள்ளனர். 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் முள்ளிவாய்க்கால் வரைசென்ற போது, 75 ஆயிரம் பேர் தான் இருந்ததாக, பொருளாதாரத் தடைகளை விதித்து, உணவுகளை அனுப்பாது, பட்டினி போட்டு, இதே இலங்கை அரசாங்கம் கொலை செய்த போது, கருத்துகளை வெளியிடாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, இன்னும் உங்களை அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் தென்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

பல பெண்கள் தமது கணவனை, பிள்ளைகளை கையில் கொடுத்தவர்கள் கண்கண்ட சாட்சியாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் இல்லை என்பது போன்று, விசாரணை செய்ய முடியாதென்பது போன்று கருத்துகளை முன்வைப்பது மிகப் பாரதூரமான விடயமாகுமெனத் தெரிவித்த அவர், அ​தனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றார்.  

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் கூடிய உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அளித்த உறுதி மொழியின் பிரகாரம், தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், உண்மையைக் கண்டறிந்தன் பின்னர், முதற்படி அவர்கள் முன்னோக்கி நகர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.  

மறப்பதா? மன்னிப்பதா? என்பது பற்றிய முடிவுக்கு தமிழ் மக்கள் வர முடியுமெனத் தெரிவித்த அவர், நாங்கள் குற்றம் இழைத்திருந்தோம். எமது இராணுவம் இவ்வளவு தமிழ் மக்களை அழித்தது, எமது நாட்டில் இவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டன, தமிழர்கள் தெருத் தெருவாக இழுத்துக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.  

“பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்பட்ட வலயத்துக்குள் மக்கள் வரவழைக்கப்பட்டு, கொத்தனிக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, அந்த மக்கள் மீது பாரிய இனவழிப்பு முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் ஒத்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். அதன்பின்னர், அதற்கான உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளையும் சாட்சியங்களையும் பெற்று அதன் பின்னர், அதற்கான தீர்வு என்ன என்பது பற்றிப் பார்ப்போம் என்று தெரிவித்த அவர், எல்லாவற்றையும் மூடி மறைத்து, சிங்களக் குடியேற்றங்களையும், பௌத்த சின்னங்களையும் அமைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் விடயங்கள் எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என்றார்.  

அன்றையதினம் உடனடியாக பதிலளிக்கக் கூடிய வகையில் விவாதத்துக்குரிய இடமாக இருக்காத காரணத்தால், அந்த இடத்தில் அதற்குரிய பதிலை தங்களால் வழங்க முடியவில்லையெனத் தெரிவித்த அவர், ஆனால், நாடாளுமன்றத்திலும் சரி, இனி வருகின்ற இடங்களிலும் சரி, எமது கருத்துகளைச் சரியாகத் தெரிவிப்போம் என்றார்.   

மிக முக்கியமாகத் தமிழர்கள் மீது இனப்படுகொலை செய்யப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன தீர்வு, அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தமிழர்கள் தான் முடிவை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தாமே கொலைகளையும் செய்துவிட்டு குற்றங்களையும் புரிந்துவிட்டு, படுகொலைகளையும் செய்துவிட்டு, மறப்போம், மன்னிப்போம் என தாமே தீர்ப்புச் சொல்லும் நிலையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X